சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’அமரன்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஏறத்தாழ சுமார் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா படத்தில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது.
அதன்படி, இப்படம் தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
தற்போது, சிவகார்த்திகேயன் தனது 23-வது படத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும், 24-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, சுதா கொங்கராவின் படத்தில் அவர் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்திற்கான பூஜை இன்றைய தினம் நடைபெற்றது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“