தனுஷ் படத்தில் இந்த பாட்டு என் ஃபேவரேட்; அதுக்கு காரணம் இவர்தான்; சிவகார்த்திகேயன் உருக்கம்!
'காதல் கொண்டேன்' படத்தில் இடம்பெற்ற 'தேவதையை கண்டேன்' பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், நா. முத்துக்குமாரின் பாடல்கள் குறித்து தனது அனுபவங்களை அவர் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
'காதல் கொண்டேன்' படத்தில் இடம்பெற்ற 'தேவதையை கண்டேன்' பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், நா. முத்துக்குமாரின் பாடல்கள் குறித்து தனது அனுபவங்களை அவர் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
பாடலாசிரியர் நா. முத்துக்குமார் குறித்து தனது நினைவலைகளை, நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொண்டார். நா. முத்துக்குமார் நினைவாக பிகைண்ட்வுட்ஸ் டிவி யூடியூப் சேனல் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற அவர், பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
Advertisment
அதன்படி, "சினிமாவில் என்னுடைய முதல் பாடலை எழுதியவர் நா. முத்துக்குமார் தான். அவரது வரிகளுடனும், ஆசீர்வாதத்துடனும் என்னுடைய பயணத்தை தொடங்கினேன். சினிமாவில் அவருக்கும், எனக்குமான தொடர்பு அப்படி தான் உருவானது. என்னுடைய படங்களில் சுமார் 4,5 பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். குறிப்பாக, 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
காலத்தால் அழியாத பாடலை எனக்காக கொடுத்து எனக்கு ஆசீர்வாதம் வழங்கியவர் நா. முத்துக்குமார். அவரை சந்தித்து 2,3 முறை மட்டுமே பேசி இருக்கிறேன். அதிகப்படியான பழக்கமோ, நெருக்கமோ அவருடன் எனக்கு இல்லை. ஆனால், ஒரு பாடலாசிரியராக அவரது வரிகளுக்கும், எனக்கும் பெரிய நெருக்கம் இருக்கிறது.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் யுவன் சங்கர் ராஜா - நா. முத்துக்குமார் ஆகியோரது கூட்டணியில் பல பாடல்கள் வெளியாகின. கல்லூரி காலத்தில் ஒரு பெண்ணை பார்த்ததும் ஏற்படும் உணர்வுகள் அனைத்தும் 'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் பாடல்களில் நிறைந்திருந்தன. அதன் பின்னர் மிகப்பெரிய தொடர்பு, '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற 'நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடல் மூலமாக ஏற்பட்டது.
Advertisment
Advertisements
எனக்கு 17 வயதாக இருந்த போது, என்னுடைய தந்தை மறைந்தார். அவர் மறைந்து 23 ஆண்டுகளை கடந்த பின்னரும், அந்த வலி இருக்கிறது. அந்த வகையில், 'நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடலில் வரும் 'பேசிப் போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும். சாம்பல் கரையும்; வார்த்தை கரையுமா?' என்ற வரிகள் எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் வலிகள் அனைத்தையும், அவர் வார்த்தைகளில் மாற்றி விட்டார்.
மேலும், நா. முத்துக்குமாரின் 'வேடிக்கை பார்ப்பவன்', 'பட்டாம்பூச்சி விற்பவன்' போன்ற புத்தகங்களை படிக்க தொடங்கினேன். முதன்முதலில் என்னை இயக்குநர் நெல்சன் பாடல் எழுத கூறிய போது, ஒரு ஜாலியான பாடலை எழுதினேன். அதற்காக நான் வாங்கிய சம்பளத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் கொடுத்தேன். இதனை உதவியாக நான் கருதவில்லை; எனக்கான கடமை இது. நா. முத்துக்குமாரை போலவே அவரது மகனும் நிறைய பாடல்கள் எழுத வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
நா. முத்துக்குமார் இல்லாத காரணத்தால் பல கொடுமைகள் நடக்கிறது. குறிப்பாக, நான் பாடல்கள் எழுத தொடங்கி இருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை பாடல் எழுத தொடங்கும் போதும், நா. முத்துக்குமாரின் பாடல்களை கேட்டு விட்டு தான் எழுதுவேன். அந்த வகையில், 'காதல் கொண்டேன்' படத்தில் இடம்பெற்ற 'தேவதையை கண்டேன்' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.