மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இணைந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
அண்மையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அமரன்'. இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று பின்னணியில் அமைந்திருந்தது. இதில் பிரதான பாத்திரங்களாக சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக, இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம், சுமார் ரூ. 300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக, இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியானது.
இந்நிலையில், மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இதைத் தொடர்ந்து, கோயிலின் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு சிவகார்த்திகேயன் சார்பாக அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. முன்னதாக, சிவகாத்திகேயனுக்கு கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். இதனிடையே, சிவகார்த்திகேயனை கண்ட பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“