ஒரு சில கலைஞர்கள் மட்டுமே நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் சிறந்து விளங்குவார்கள். தமிழ் சினிமாவில் அப்படி ஒரு சிறப்பு எஸ்.ஜே. சூர்யாவிற்கு இருக்கிறது. திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தாலும், இப்போது நடிப்பில் எஸ்.ஜே. சூர்யா கலக்கி வருகிறார்.
குறிப்பாக, 'இறைவி' திரைப்படம் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது. அதற்கு முன்னர், பல படங்களில் நடித்திருந்தாலும், 'இறைவி' திரைப்படத்தின் மூலம் தனது மாறுபட்ட நடிப்பை எஸ்.ஜே. சூர்யா வெளிப்படுத்தி இருந்தார். அதிலும், அப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு நபர் அழுகையை அடக்கிக் கொண்டு பேசுவது போன்ற காட்சிகள், எஸ்.ஜே. சூர்யாவிற்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது.
இதன் பின்னர், எஸ்.ஜே. சூர்யா நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றன. 'மாநாடு', 'மார்க் அண்டனி', 'வீர தீர சூர' உள்ளிட்ட படங்களிலும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் இவர் நடித்த சரிப்போதா சனிவாரம் திரைப்படமும் வசூலை வாரிக் குவித்தது.
நடிப்பில் இவ்வளவு உச்சத்தை தொட்டிருந்தாலும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவை மிஸ் பண்ணுவதாக அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். ஏனெனில், 'வாலி', 'குஷி' போன்ற படங்கள் மூலமாக அஜித், விஜய் ஆகியோரின் சினிமா உலகை அடுத்த இடத்திற்கு நகர்த்திச் சென்ற பெருமை எஸ்.ஜே சூர்யாவிற்கு இருக்கிறது.
இதேபோல், தெலுங்கிலும் உச்ச நட்சத்திரங்களான மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோரை கொண்டு எஸ்.ஜே. சூர்யா திரைப்படங்கள் இயக்கியுள்ளார். மேலும், தனது இயக்கத்தில், தானே இசையமைத்து இசை என்ற படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக 'கில்லர்' என்ற திரைப்படத்தை இயக்கி, அதில் தானே நடிக்கப் போவதாக எஸ்.ஜே. சூர்யாவிடமிருந்து சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில், நியூ (2004), நானி (தெலுங்கு - 2004), அன்பே ஆருயிரே (2005), புலி (தெலுங்கு -2010) ஆகிய திரைப்படங்களில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தக் கூட்டணி ஐந்தாவது முறையாக இணைவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.