சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கர் உட்பட இன்னும் சிலரும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வரும் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி மீண்டும் இத்தேர்தலில் போட்டியிடுகிறது.கடந்த தேர்தலில் இதே அணியில் துணைத் தலைவராகப் போட்டியிட்ட பரத், இந்த முறை தனியாக ஒரு அணியை உருவாக்கியுள்ளார்.
தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.
தற்போது செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட் கடைசி நேரத்தில் போட்டியிட மறுத்து விட்டதால் அவருக்குப் பதில் நிரோஷா செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான தினேஷ் கோபால்சாமி தலைமையில் மூன்றாவதாக ஒரு அணியும் களத்தில் இறங்கியுள்ளது. தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைத் தவிர, இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், பதினான்கு கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மூன்று அணிகளின் சார்பாக மொத்தம் 69 பேர் போட்டியிட உள்ளனர்.
தினேஷ், போஸ் வெங்கட், பரத், நவீந்தர், துரைமணி, ராஜ்காந்த், அழகப்பன், லொள்ளு சபா பழனியப்பன், மீனா குமாரி, பிரேமி வெங்கட், ரவீனா மற்றும் மறைந்த நடிகர் நேத்ரனின் மனைவி தீபா உள்ளிட்டோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலே சொன்ன வேட்பாளர்களில் ரவீனா தாஹா தான் மிகவும் இளைய வேட்பாளர் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கி விட்டு அந்த சீரியலில் ஒளிபரப்பாகுவதற்கு முன்பே அதிலிருந்து விலகியதால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. ஆனால், ரெட் கார்டு கொடுக்கப்பட்டும் எப்படி தேர்தலில் போட்டியிடுகிறார் என்று கேள்விகள் வருகிறது. ரெட் கார்டு என்பது அவர் நடிப்பதற்கான தடை மட்டுமே என்றும், அது தேர்தலில் போட்டியிடுவதை கட்டுப்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக பெப்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
சின்னத் திரை நடிகர் சங்கத்தினருக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு சின்னத்திரை வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.