Advertisment

காப்பி அடிப்பதில் இத்தனை கஷ்டங்களா...?

தமிழில் மட்டுமில்லை அனைத்து மொழிகளிலும் காப்பி உண்டு. ஒரே வித்தியாசம், அவர்கள் காப்பியை உப்பாகப் பயன்படுத்தினால் நாம் பயன்படுத்துவது தண்ணீராக.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
raja-rani-movie

ராஜா ராணி படத்தில் ஒரு காட்சி

பாபு

Advertisment

ஆதிகாலகத்தில் ஒரு மனிதன் (அல்லது குரங்கு?) செய்ததை பார்த்தே இன்னொரு மனிதன் சைகை செய்ய, வேட்டையாட, ஆடை அணிய பழகியிருப்பான். அந்த வகையில் மனிதனின் ஆதிகுணமாக காப்பியடித்தலை சொல்லலாம். தமிழில் மட்டுமில்லை அனைத்து மொழிகளிலும் காப்பி உண்டு. ஒரே வித்தியாசம், அவர்கள் காப்பியை உப்பாகப் பயன்படுத்தினால் நாம் பயன்படுத்துவது தண்ணீராக. சில நேரம் வாரி இறைத்துவிடுகிறேnம்.

பிறமொழிகளிலிருந்து காப்பியடிக்கப்பட்ட தமிழ்ப் படங்களின் பட்டியலைப் பார்ப்பதில் எப்போதுமே ஒரு சுவாரஸியம் உண்டு. 'அடப்பாவி, இந்தப் படத்தைப் பார்த்து உன்னையெல்லாம் இன்டெலிஜென்ட்னு நினைச்சேன், நீ வெறும் காப்பிதானா' என்று மனசுக்குள் நினைக்கையில் ஏமாற்றப்பட்டதற்கான திரும்பி மட்டுமா கிடைக்கிறது? 'அவனும் நம்ம மாதிரி பூட்ட கேசுதான், எப்பிடியோ காப்பியடிச்சு பெரிய ஆளாயிட்டான்' என்று நம் ஈகோவையும் கொஞ்சம் சாந்தப்படுத்தலாம்.

எந்தெந்த படங்கள் எந்தெந்த வெளிநாட்டுப் படங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டன என்பது நமக்கு மனப்பாடம். ஆனால், அதில் உள்ள சிக்கல்கள், கஷ்டங்கள் தெரியுமா?

2004 இல் செல்லுலார் என்ற ஹாலிவுட் படம் வெளியானது. சென்னை காசி தியேட்டரில் பிதுங்கிற கூட்டம். எளிய கதை. ஒரு அம்மிணியை கடத்தி அவளது கணவனை பிளாக்மெயில் செய்கிறார்கள். அந்த அம்மிணி உடைக்கப்பட்ட போனை எப்படியோ ஒட்ட வைத்து ஒருவனுடன் பேசுகிறாள். அந்த ஒரு எண்ணில் மட்டுமே அவளால் தொடர்பு கொள்ள முடியும். அதை வைத்து அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பதை விறுவிறுப்பாக எடுத்திருந்தார்கள். ஹீரோ யாரோ ஒரு இளைஞன். ஆனால் வில்லன், நமது ஜேசன் ஸ்டெதம். காசியில் அன்று பல காப்பியவான்கள் இருந்திருக்க வேண்டும்.

எஸ்.வி.சேகர் தனது மகன் அஸ்வினை நாயகனாக அறிமுகப்படுத்த எடுத்த வேகம் படம் செல்லுலார் படத்தின் காப்பி. சேகர் வேகத்தை மலேசியாவில் உருவாக்கிக் கொண்டிருந்த அதேநேரம் இன்னொரு குரூப் சென்னை மந்தைவெளியில் அதே செல்லுலாரை நாயகன் என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருந்தது. ஜே.கே.ரித்தீஷ், ரமண நடித்தனர்.

எஸ்.வி.சேகர் முந்திக்கொண்டு படத்தை வெளியிட நாயகன் கோஷ்டிக்கு கதவிடுக்கில் மாட்டிய எலியின் அவஸ்தை. படம் முடிந்தும் படத்தை வெளியிட முடியாத நிலை. வேகம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்து நாயகனை வெளியிட்டனர். வேகம், நாயகன் இரண்டும் மகத்தான தோல்வி.

veeram வீரம் படத்தில் ஒரு காட்சி

இது போன்ற விபத்து பலமுறை தமிழில் நடந்திருக்கிறது. அக்ராஸ் தி ஹால் ஆங்கிலப் படத்தை காப்பியடித்து நேர் எதிர் என்ற படத்தை 2014 இல் எடுத்தனர். படப்பிடிப்பு ஏவிஎம்மில் நடந்தது. அதே ஏவிஎம்மில், அவர்கள் படப்பிடிப்பு நடந்ததற்கு அருகில் உள்ள ப்ளோரில் அதே அக்ராஸ் தி ஹால் படத்தை காப்பியடித்து பிரபல தயாரிப்பாளரின் மகன் ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். என்னடா இரண்டு செட்டும் ஒரே மாதிரி இருக்கு என்று கார்ப்பென்டருக்கு சந்தேகம் வந்த பிறகே விஷயம் வெளியுலகுக்கு கசிந்தது. அப்புறமென்ன, பணம் போடுறவருக்கு தெரிஞ்சா படம் பாதியில நின்னுடும் என்று சைலண்டாக இருதரப்பும் படத்தை எடுத்தது. அதில் நேர்எதிர் முந்திக்கொண்டு வெளியாக மற்ற படம் இன்னும் பெட்டிக்குள்ளேயே உள்ளது.

நீதி - காப்பியடிப்பது என்று முடிவானால் அந்த எண்ணம் இன்னொருவனின் மண்டைக்குள் மின்னடிப்பதற்குள் வேலையை தொடங்கியிருக்க வேண்டும். காப்பியில் முந்துபவனுக்கே பந்தி.

ஒரு படம் எந்த படத்தின் காப்பி என்று அறிந்து கொள்வது ஒருகலை. பிசகினால் கடைசிவரை தவறாகவே குறிப்பிட்டுக் கொண்டிருப்போம். அட்லியின் ராஜா ராணி எந்தப் படத்தின் தழுவல்? இதற்கு 99 சதவீதம் பேர் மணிரத்னத்தின் மௌனராகம் என்பார்கள். தவறு. 2007 இல் புனித் ராஜ்குமார் நடிப்பில் மிலானா என்ற படம் வந்தது. அச்சு அசலாக அப்படியே ராஜா ராணி கதை. நாயகன், நாயகி இருவருக்கும் பிளாஷ்பேக்கில் காதல், முதலிரவில் இருந்தே பிரச்சனை, நாயகிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது உடனிருந்து கவனிக்கும் நாயகன் என்று அனைத்தும் அச்சு அசலாக அப்படியே. கடைசி கிளைமாக்ஸ்கூட ஏர்ப்போர்ட்டில்.

ஆனால், மிலானாவுக்கும் ஒரு மூலம் உள்ளது. 2002 இல் வெளியான சத்தியன் அந்திக்காடின் 'யாத்ரகாருடே ஸ்ரத்தைக்கு.'

நீதி - ஒரு கதையின் சாயலில் பல படங்கள் இருந்தால், அதுதான் நமது இரை. ஆளாளுக்கு ஒரு படத்தை சொல்லும் குழப்பத்தில் நாம் எஸ்கேப்பாகிவிடலாம்.

நம் விரல் நமது கண்ணையே குத்தினால் எப்படியிருக்கும்? பவன் கல்யாண் படத்தில் நடந்தது அந்தவகை. ரேர் பீஸ்.

2013 இல் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த அத்தரின்டிகி தாரேதி படம் வெளியானது. அதில் நாயகி சமந்தாவின் வீட்டில் டிரைவராக பொய் சொல்லி வேலை பார்த்துக் கொண்டிருப்பார் பவன் கல்யாண். சமந்தா மீது நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்துக்கு ஒரு கண். சமந்தாவுடன் ரொமான்ஸ் செய்ய, அகலிகை கதையை நாடகமாக போடுவார் பிரம்மானந்தா. சமந்தா அகலிகை. அகலிகை கணவர் முனிவராக பவன் கல்யாண். முனிவர் அதிகாலையில் குளிக்கப் போகையில் முனிவரைப் போல் வடிவமெடுத்து வந்து அகலிகையுடன் கூடும் இந்திரனாக பிரம்மானந்தா.

கதைப்படி பிரம்மானந்தா சமந்தாவுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும். குளிக்க துண்டு எடுத்தேன், சோப்பு எடுக்கலை என்று பாதியிலேயே திரும்பிவரும் பவன் கல்யாண் - அதாவது முனிவர், 'நீ யாருடா என் பொண்டாட்டிகூட' என்று இந்திரனாகிய பிரம்மானந்தத்தை வெளுப்பார். ஆ... இது கதைக்காகாது என்று பிரம்மானந்தம் கதாபாத்திரத்தை மாற்றுவார். இப்போது இந்திரன் பவன் கல்யாண், முனிவர் பிரம்மானந்தா. முனிவர் குளிக்காமல் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு இந்திரனும் அகலிகையும் ரொமான்ஸ் செய்கையில் வந்துவிடுவார். 'ஏண்டா இப்படி அதிகாலையில் பொண்டாட்டி எந்திரிக்கிறதுக்கு முன்னாடி குளிக்கப்போனா என்னை மாதிரி கண்டவனும் வந்து உன் பொண்டாட்டியை ரொமான்ஸ் செய்ய மாட்டானா..?' என்று இந்திரனாகிய பவன் கல்யாண் முனிவராகிய பிரம்மானந்தத்தை உதைப்பார். இதுவும் போச்சா என்று பிரம்மானந்தம் அகலிகையின் வேஷத்தைப் போடுவார். 'ஏண்டி, எத்தனை வருஷமா என்கூட குடும்பம் நடத்துற. எவனோ என் வேஷத்துல வந்தா, அவனுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாம அவன்கூட ரொமான்ஸ் பண்ணுவியா' என்று அகலிகையான பிரம்மானந்தத்துக்கே இப்போதும் அடிவிழும்.

இந்த நகைச்சுவை காட்சியை அப்படியே சுட்டு அஜித்தின் வீரம் படத்தில் வைத்தார்கள். அதே நாயகி வீடு, நாயகனுக்கு பதில் அவரது தம்பிகள், பிரம்மானந்தம் இடத்தில் தம்பி ராமையா. அகலிகை கதைக்குப் பதில் நாயகன், நாயகி, வில்லன் என்று ஒரு முக்கோண சினிமா கதை. தியேட்டரில் அதைப் பார்த்து குலுங்கி குலுங்கிச் சிரித்தார்கள்.

சரி, இதில் என்ன பிரச்சனை?

வீரம் படத்தை பவன் கல்யாண் நடிப்பில் 2017 இல் கட்டமராயுடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். வீரம் படத்தில் வரும் தம்பி ராமையா போர்ஷன் பவன் கல்யாணின் அத்தரின்டிகி தாரேதி படத்திலிருந்து அப்படியே அடித்தது. அதை எப்படி மீண்டும் பவன் கல்யாண் நடிக்கும் கட்டமராயிடு படத்தில் வைக்க முடியும்? இதென்னாடா ஆந்திராவுக்கு வந்த அவஸ்தை என்று, கடைசியில் அந்த இடத்தில் ஒரு காமாசோமா காட்சியை வைத்து ஒப்பேற்றினர். படம் பணால்.

காப்பியடிச்சிட்டாங்ன்னு நாம ஈஸியா கடந்து போயிடறேnம். ஆனா, காப்பிக்கு பின்னால எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்கன்னு பார்த்தா, பாவம் புதுசா ஒரு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தா என்னன்னு நமக்கே தோணும்.

நீதி - காப்பியடிக்கிறது கூட கஷ்டம்தாங்க.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment