டிஸ்கோ சாந்தி 80, 90களில் தென்னிந்திய சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர். குறிப்பாக ஐட்டம் பாடல்களில் தோன்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.
டிஸ்கோ சாந்தி தற்போதைய தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சி எல் ஆனந்தனுக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை "விஜயபுரி வீரன்" என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு மூத்த தமிழ் நடிகர். சாந்திக்கு’ லலிதா குமாரி என்ற சகோதரியும் இருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான்.
சாந்தி 1986 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான உதய கீதம் மூலம் அறிமுகமானார். சிறந்த பாத்திரங்கள் கிடைக்கும், தனது நடிப்புத் திறமையைக் காட்ட வேண்டும் என்ற நம்பிக்கையில் சில திரைப்படங்களில் சில துணை வேடங்களில் நடிக்க முயன்றார் சாந்தி.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு ஐட்டம் பாடல்களுக்கான வாய்ப்புகள் தான் கிடைத்தன. அதிலும் சாந்தி ஜொலித்தார்.
1985 முதல் 1996 வரையிலான 11 வருட வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஒரியா என பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
டிஸ்கோ சாந்தி 1996 ஆம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகரான ஸ்ரீஹரியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, குடும்பப் பொறுப்பை ஏற்றார். இந்த தம்பதிக்கு, அக்ஷரா ஸ்ரீஹரி என்ற மகளும், ஷஷாங்க் ஸ்ரீஹரி, மேகம்ஷ் ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளனர்.
இதில், அவரது மகள் அக்ஷரா ஸ்ரீஹரி நான்கு மாத குழந்தையாக இருந்தபோது இறந்துவிட்டார். மகளின் நினைவாக அவரது குடும்பத்தினர்’ பள்ளி மற்றும் கிராமங்களுக்கு ஃவுளூரைடு இல்லாத தண்ணீருக்காக மாணவர்களுக்கு உதவ அக்ஷரா அறக்கட்டளையை நிறுவினர். மேட்ச்சலில் நான்கு கிராமங்களை தத்தெடுத்தனர்.
ஸ்ரீஹரி 2013 ஆம் ஆண்டு "ராம்போ ராஜ்குமார்" திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மஞ்சள் காமாலையால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். சாந்திக்கும் கல்லீரல் கோளாறு இருந்தது, இதற்காக அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் நெம்புகோல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அது வெற்றிகரமாக முடிந்தது.
இந்தி திரைப்படமான ஆடங்க் (1996)தான், திருமணத்திற்கு முன் சாந்தி, கடைசியாக நடித்த படம். இப்படத்தில் தர்மேந்திரா, ஹேமமாலினி நடித்திருந்தனர்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்தி திரைப்படமான டர்ட்டி பிக்சரில்’ திரைப்படத் துறையில் டிஸ்கோ சாந்தியின் அனுபவங்களிலிருந்து சில சம்பவங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படி திரையுலகில் பிரகாசமாக ஜொலித்த டிஸ்கோ சாந்தியின் சொந்த வாழ்க்கை முழுவதும் பல திருப்பங்களும், கவலைகளும் சூழ்ந்துள்ளன.
டிஸ்கோ சாந்தியின், தந்தையின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் வறுமையில் வாடியது. சாந்தி வேறு வழியில்லாமல் தான் நடிக்கவே வந்தார். சினிமாவில் கதாநாயகி நடிக்க ஆசைப்பட்ட அவரை, சினிமா உலகம் ஒரு ஐட்டம் டான்சராக போகப் பொருளாக பயன்படுத்தியது. ஆனால் என்ன செய்வது? குடும்ப வறுமைக்காக வேறு வழியில்லாமல், அனைத்து வேதனைகளையும் தாங்கிக் கொண்டு சாந்தி நடித்தார். அவரது கவர்ச்சி நடனத்தை அவரே முகம் சுளித்து போனதால், தன் குடும்பத்தாரிடம் தான் நடித்த திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என கண்டீஷன் போட்டுள்ளார்.
இப்படி ஒரு நிலையில் தான் ஸ்ரீஹரிக்கு, சாந்தி மீது காதல் வந்துள்ளது. அவரும் பலமுறை சாந்தியிடம் ப்ரோபஸ் செய்துள்ளார். ஆனால் சாந்திக்கு இந்தமாதிரி நிறைய அனுபவங்கள் ஏற்கெனவே இருந்ததால், அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு இருவரும் கோயிலுக்கு சென்று ஒன்றாக சாமி கும்பிட்டபோது ஸ்ரீஹரி, சாந்திக்கு தெரியாமலே அவர் கழுத்தில் தாலி கட்டிவிட்டார். இப்படித்தான் சாந்தி திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தார்.
இளவயதில் கஷ்டங்களை அனுபவித்த சாந்திக்கு, குடும்ப வாழ்க்கை அனைத்து சந்தோஷங்களையும் கொடுத்தது. அப்போது தான் அவரது வாழ்க்கையில் விதி விளையாடியது. ஸ்ரீஹரி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தவறான சிகிச்சையால் உயிரிழந்து விட்டார். தற்போது சாந்தியின் இரு மகன்களும் தான் அவருக்கு பக்கபலமாக இருந்து கவனித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“