சவுந்தர்யா திருமணத்தில் ரஜினிகாந்த் அணிந்த ஆடை அதிகம் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் அந்த ஆடையை புகழ்ந்து ரசிகர்கள் பதிவிட்டனர்.
ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று (பிப்ரவரி 11) சென்னையில் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்ற போதிலும், மிக உற்சாகமாக இந்த திருமணம் நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
மணப்பெண்ணின் தந்தையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தத் திருமணத்திற்கு பட்டு வேட்டி சட்டை அணிந்து, தோளில் துண்டு போட்டிருந்தார். மாப்பிள்ளை விசாகனும் அதே போன்று பட்டு வேட்டி, சட்டையுடன் தோளில் ஊதா நிறத்தில் பட்டுச் சேலை போன்ற துண்டு அணிந்திருந்தார். சவுந்தர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மிகவும் எளிமையான உடையில் வந்திருந்த ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், குடும்பப் புகைப்படங்களிலும் தலைகாட்டவில்லை. ஆனால் இன்று அவரும்பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார்.
இதற்கிடையே கல்யாண மாப்பிள்ளையை விட ரஜினியின் உடை அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இளம் நடிகரான தனுஷையும் ‘கெட் அப்’பில் ரஜினி தூக்கி சாப்பிட்டுவிட்டதாகவும் சிலர் புகழ்ந்திருக்கின்றனர்.
‘மாப்பிள்ளை அவரு, டிரஸ் என்னுது’ என்பது ரஜினியின் புகழ்பெற்ற ஒரு டயலாக்! அதை நிஜமாக்குவதுபோல இந்த குடும்ப விழாவில் தனது மாப்பிள்ளைகளைவிட ‘மாஸ்’ஸாக காட்சியளித்தார் ரஜினிகாந்த்.