நடிகர் விஷால் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில், வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார். கடைசியாக மார்க் ஆண்டனி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். அதன்பிறகு ஹரி இயக்கத்தில் நடித்த ரத்னம் படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதனிடையே விஷால் நடிப்பில், கடந்த 2013-ம் ஆண்டு தயாரான படம் மதகஜராஜா. காமெடி ஆக்ஷன் கதையுடன் தயாரான இந்த படத்தை சுந்தர்.சி இயக்கிய நிலையில், சந்தானம் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். 11 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மதகஜராஜா படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ந் தேதி வெளியானது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பங்கேற்ற விஷால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பேசும்போது கை நடுக்கத்துடன் பேசியிருந்தார். இதனால் அவருக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழுந்த நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி விஷாலுக்கு மலேரியா காய்ச்சல் என்று கூறியிருந்தார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
விஷால், உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்து, பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், சில யூடியூப் சேனல்கள், விஷால் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டிருந்தது. குறிப்பாக, விஷால் மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையாகிவிட்டதாக கூறியிருந்தனர். மேலும் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார்.
இந்த கருத்துக்கள் காரணமாக நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், விஷால் குறித்தும், நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்தும் அவதூறாக பேசிய, யூடியூப்பர் மற்றும் அவர் பேச்சை ஒளிபரப்பிய 2 சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர்கள் சஙகம் சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“