கேரளாவில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையின் தாக்கத்தினால், பல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதே ஆண்டு மலையாள சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையில், ஒழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையின் ஒரு பகுதி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நடிகர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் எழுந்த இந்த கிளர்ச்சி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவில், நடிகை ராதிகா உள்ளிட்ட நடிகைகள் தங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அந்த நபர் திரைத்துறையில் 5 வருடங்கள் பணியாற்ற முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நடிகர் மீது பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் திரைத்துறையில் பணியாற்ற 5 வருடங்கள் தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும். பாலியல் புகார் அளிப்பவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும். பாலியல் குற்றச்சாட்டு கூறப்படும் நபர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். பாதிக்கப்பட்டோர் கமிட்டி மூலம் புகார் அளிக்கலாம். ஊடகங்களில் பேச வேண்டாம்.
யூடியூப்பில் திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பினால், சைபர் க்ரைமில் புகார் கொடுக்க ஒத்துழைப்பு தருவோம். பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கும் கமிட்டியின் நடவடிக்கை குறித்து நடிகர் சங்கம் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“