/indian-express-tamil/media/media_files/2025/05/14/IwKeX6y2aczKI8g4us95.jpg)
தென்னிந்திய சினிமாவின் மெகாஸ்டார் என்ற அழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஆஸ்கார் விருது வாங்கவில்லை என்றாலும், ஆஸ்காருக்கு அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமை அவருக்க உண்டு.
கொனிடேலா சிவசங்கர வரபிரசாத் என்ற இயற்பெயருடன் பிறந்த சிரஞ்சீவி, இன்று தென்னிந்தியாவின் மெகாஸ்டார். அவரது புகழ் தெலுங்கு சினிமாவையும் தாண்டி, இந்திய சினிமா முழுவதையும் ஆட்கொண்டுள்ளது. பல சாதனைகளுக்கும், முதன்மைகளுக்கும் சொந்தக்காரரான சிரஞ்சீவி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
சிரஞ்சீவி என்ற பெயர் அவரது தாயார் கொடுத்த ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிரஞ்சீவி என்றால் அழியாதவர் என்று பொருள். இது நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தின் குலதெய்வமான ஹனுமானின் மற்றொரு பெயர் ஆகும். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய சிரஞ்சீவி, 'ஐ லவ் யூ', 'இடி கதா காது', 'மோசகாடு', 'ராணி காசுலா ரங்கம்மா', '47 நாட்கள்', '47 ரோஜுலு' போன்ற படங்களில் வில்லனாகவே நடித்திருக்கிறார்.
1987-ஆம் ஆண்டில், தென்னிந்தியாவில் இருந்து முதல் முறையாக ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கு அழைக்கப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையை சிரஞ்சீவி பெற்றார். 1992-ஆம் ஆண்டில், நடிகர் அமிதாப் பச்சனை விட அதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகர் என்ற சாதனையைப் படைத்தார். 'ஆபத்பந்தவுடு' படத்திற்காக ரூ.1.25 கோடி சம்பளம் பெற்று, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற மைல்கல்லை எட்டினார்.
ஒற்றை, இரட்டை, மற்றும் மூன்று வேடங்களில் நடித்து அந்த மூன்று படங்களும் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்த ஒரே நடிகர் இவர்தான். 2024-ஆம் ஆண்டில், 45 ஆண்டுகளுக்கும் மேலான தனது சினிமா வாழ்க்கையில், 156 படங்களில் 537 பாடல்களில் 24,000-க்கும் மேற்பட்ட நடன அசைவுகளை வெளிப்படுத்தியதன் மூலம், இந்தியத் திரைப்படத் துறையில் மிகச் சிறந்த நடிகர்-நடனக் கலைஞர் என கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றார்.
சினிமா வாழ்க்கை மட்டுமின்றி, சமூகப் பணிகளிலும் சிரஞ்சீவி பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறார். 1998-ஆம் ஆண்டில், அவர் நிறுவிய சிரஞ்சீவி தொண்டு நிறுவனம், ஆந்திரப் பிரதேசத்தில் ரத்தம் மற்றும் கண் தானங்களை அதிகம் பெற்றுவரும் நிறுவனமாகத் திகழ்கிறது. இவரது குடும்பத்தில், தம்பி பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதல்வராக இருக்கிறார். மகன் ராம்சரண், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.