பாபு
இந்தியாவில் தேசிய திரைப்பட விருதுகளுக்கு அடுத்தப்படியாக மரியாதைக்குரிய விருதாக கருதப்படுவது ஃபிலிம்பேர் விருது. இதனை பெறுவது நட்சத்திரங்கள் மத்தியில் கௌரவமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்பேர் விருதை நயன்தாரா, குஷ்பு, கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் புறக்கணித்தனர்.
விருது விழாக்கள் முன்பெல்லாம் எப்போதாவது ஒன்றிரண்டுதான் நடக்கும். ஆனால், இன்று சின்ன நிறுவனங்களும் விருது விழாக்களை நடத்துகின்றன. விருது விழாக்களில் பிரபல நட்சத்திரங்கள் பங்கு பெறும்போது அதற்கு ஒரு சந்தை மதிப்பு கிடைக்கிறது. தனியார் தொலைக்காட்சிக்கு பெரும் தொகைக்கு விருது விழா நிகழ்ச்சியை சம்பந்தப்பட்டவர்கள் விற்று காசு பார்க்கின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் இதற்கு 'செக்' வைத்துள்ளது.
எந்த விருது விழா அல்லது நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் விழாவாக இருந்தாலும், கலந்து கொள்ளும் நட்சத்திரங்களுக்கு ஊதியம் தர வேண்டும். நட்சத்திரங்களுக்கு அதனை வாங்கிக் கொள்ள விருப்பமில்லை என்றால் அந்தப் பணம் திரைப்படதுறையின் அறக்கட்டளைக்கு செல்லும். அல்லது விருது விழா நடத்துகிறவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கோ, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கோ நன்கொடை தர வேண்டும்.
இந்த விதிமுறை வகுக்கப்பட்ட பின் நடந்த விஜய் விருது விழா, கலர்ஸ் டிவி நடத்திய விழா, கலாட்டா டாட் காம் நடத்திய விழா என அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்கொடை அளித்த பின்பே நடத்தப்பட்டன. சமீபத்தில் பிரபல இணையதளம் நடத்திய விருது விழாவில் நயன்தாரா, விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அந்த இணையதளம் அதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 7 லட்சங்களும், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 10 லட்சங்களும் நன்கொடையாக அளித்தது.
ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்பேர் விருது விழாவிலும், விழா நடத்துகிறவர்கள் நன்கொடை தராதபட்சத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஃபிலிம்பேர் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் விழா. அவர்கள் இதுவரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள காசு தந்ததில்லை. இந்தமுறையும் தர முடியாது என மறுத்துவிட்டனர். இது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நோஸ்கட்டாக அமைய, விழாவில் நயன்தாரா, குஷ்பு போன்றவர்கள் கலந்து கொள்ளாததை தங்களது வெற்றியாக கொண்டாடி வருகிறது. கலந்து கொள்ளாத நட்சத்திரங்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்த புதிய ஏற்பாடு விருது விழா நடத்துகிறவர்களை கடும் எரிச்சலடைய வைத்துள்ளது. அதேநேரம் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கல்லாக்கள் வேகமாக நிரம்புகின்றன.