இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதாக பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்த சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுசீ லீக்ஸ் என்ற பெயரில் பல சர்ச்சையாக பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதனால் சில நடிகர் நடிகைகளின் கோபத்திற்கு ஆளான சுசித்ரா, அதன்பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்கள் எதிலும் பங்கேற்காமல் இருந்தார்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக சுசித்ரா யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார், இந்த பேட்டியில் அவர் பேசும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் கே.பாலச்சந்தர் குறித்து பேசிய, சுசித்ரா, அவர் ஒரு லஸ்டி மேன், சாகும்வரை அப்படித்தான் இருந்தார். இவரை மாதிரியான ஆட்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.
சுசித்ராவின், இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரரான இயக்குனர் கே.பாலச்சந்தர், குறித்து இப்படியா பேசுவது என்று பலரும் சுசித்ராவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சுசித்ராவின் இந்த பேச்சுக்கு, தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செத்துப் போனவர்கள் சாமிக்கு சமம். அவர்களின் குற்றம் குறைகள் பற்றி விமர்சிக்காமல் அதனை தவிர்ப்பது ஒரு நாகரிகமான ஒழுக்கம். திரையுலகின் பெருமைக்குரிய ஒரு சாதனையாளரை குறை கூறி கொச்சைப்படுத்தி இருப்பது அநாகரிகத்தின் உச்சம். இது அவரது குடும்பத்தார்க்கு எவ்வளவு கொடிய வேதனை?
தமிழ் திரையுலகிற்கு பெருமைகள் சேர்த்து, விருதுகள் பல வாங்கி, இளம் இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பாலச்சந்தர் சாரை விமர்சித்த பாடகி சுசித்ராவை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் சுசித்ராவுக்கு தங்களது கண்டனம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“