கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவரின் உடல்நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் உயிர் காக்கும் சிகிச்சைகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் நேற்று முன் தினம் எஸ்.பி.பி-யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, நேற்று மதியம் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
இதையடுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர், எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பதால் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மரியாதை செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, எஸ்.பி.பி-யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறுதிச் சடங்குகளை எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரண் நடத்துவார் எனத் தெரிகிறது. அதோடு எஸ்.பி.பி-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணை வீட்டுக்கு 2 கிலோ மீட்டருக்கு முன்பாகவே தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”