இந்திய சினிமாவில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு கொரோனாவால் பலியானார், அவருடைய மறைவுக்குப் பிறகு வரும் முதல் பிறந்த நாளில் சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாடல் வரிகளால் எஸ்.பி.பி-யின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அவருக்கு மரியாதை செய்துள்ளார்.
திரையிசை பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமாவில் உலகில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தனது பாடல்களால் லட்சக்கணக்கானவர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பாடல்கலைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல், 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக, பாடும் நிலா பாலு என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட எஸ்.பி.பி கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி காலமானார். அவருடைய மறைவும் சினிமா துறையினர், இசைத் துறையினர், லட்சக் கணக்கான ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாடகர் எஸ்.பி.பிக்கு இன்று 75வது பிறந்தநாள். அவரது மறைவுக்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாளில் சினிமா பிரபலங்கள், இசை கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய பிறந்தநாளில் எஸ்.பி.பி-யை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில், சேலத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக எஸ்.பி.பி பாடிய பாடல்களில் புகழ்பெற்ற 1270 மிகச்சிறந்த பாடல்களின் முதல் வரியை எழுதி எஸ்.பி.பி-யின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

எஸ்.பி.பி-யின் ரசிகரான குமரேசன் சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் நட்சத்திர ஓட்டலில் சமையல் கலை வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவர், இதுவரை ஒன்பது உலக சாதனைகளை நிகழ்த்தி சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தில் 240 பக்கங்களில் உள்ள வரிகளை A3 பக்கத்தில் அப்துல்கலாம் வடிவத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில்தான், குமரேசன், பாடகர் எஸ்.பி.பி பிறந்தநாளில் எஸ்.பி.பி-யின் உருவத்தை அவரது புகழ்பெற்ற பாடல்களின் முதல்வரிகளை எழுதி எஸ்.பி.பி-யின் உருவத்தை வரைந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். குமரேசன், எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலான 1969ஆம் ஆண்டு எம்ஜிஆர் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடலில் தொடங்கி 2020ஆம் ஆண்டு ரஜினி படத்தில் வரும் அண்ணாத்தே அண்ணாத்தே பாடல் வரை 1270 மிகச் சிறந்த பாடல்களின் முதல் வரிகளை கொண்டு எஸ்பிபியின் உருவ வடிவில் தத்ரூபமாக எழுதியுள்ளார். ‘ஏ4’ தாளில் ஒரே நாளில் 10 மணி நேரம் செலவழித்து இந்த சாதனையை செய்துள்ளார்.

எஸ்.பி.பி-யின் பிறந்தநாளில் பாடல் வரிகளால் அவருடை உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளார். குமரேசனின் இந்த முயற்சியை எஸ்.பி.பி ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“