பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த், “பாலு சார், நீங்கள் பல ஆண்டுகள் என்னுடைய குரலாக இருந்தீர்கள். உங்களுடைய குரலும் நினைவுகளும் எனக்குள் என்றென்றைக்கும் வாழும்.. நான் உங்களை உண்மையாக மிஸ் பண்றேன்” என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#RIP Balu sir ... you have been my voice for many years ... your voice and your memories will live with me forever ... I will truly miss you ... pic.twitter.com/oeHgH6F6i4
— Rajinikanth (@rajinikanth) September 25, 2020
நடிகர் ரஜினிகாந்த் பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், உருக்கமாக இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “இன்றைக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடி மதிப்புக்குரிய எஸ்.பி.பி நம்மைவிட்டு பிரிந்திருக்கிறார்கள். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. எஸ்.பி.பி-யுடைய பாட்டுக்கும் அவருடைய குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கமாட்டார்கள். அவருக்கு தெரிந்தவர்கள் அவருடைய பாட்டைவிட, அவருடைய குரலைவிட அவரை நிறைய நேசித்தார்கள். அதற்கு காரணம் அவருடைய மனிதநேயம். அவரை எல்லாரும் சிறிவர்கள், பெரியவர்கள் என்று பார்க்காமல் மதித்தார்கள். கௌரவம் கொடுத்தார்கள். அன்பு கொடுத்தார்கள். அவ்வளவு பெரிய நல்ல அருமையான அன்பான ஒரு மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப் பெரிய பாடகர்களை உருவாக்கியிருக்கிறது. முகமது ரஃபி, கிஷோர் குமார், கண்டசாலா, டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு சிறப்பு எஸ்.பி.பி-க்கு இருக்கிறது. அது என்னவென்றால், அவர்கள் எல்லாமே குறிப்பட்ட ஒரு மொழியில் மட்டுமே பாடினார்கள். அதனால், அவர்களை அந்த மொழிக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், எஸ்.பி.பி பல மொழிகளில் பாடினார்கள். அதனால், அவரை இந்தியாவில் இருக்கிற அனைவருக்குமே தெரியும். முக்கியமாக தென்னிந்தியாவில் அவருடைய ரசிகர்களாக இல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வளவு அவரை ரசித்தார்கள். அவருடைய அந்த இனிமையான, கம்பீரமான குரல் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்கூட நம் மத்தியில் நம் காதுகளில் ஒளித்துக்கொண்டே இருக்கும். ஆனால், அந்த குரலுக்கான உரிமையாளர் இனிமேல் நம்மகூட இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மிகப் பெரிய ஆத்மா, மிகப் பெரிய பாடகர், மிகப் பெரிய மகான் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நன்றி வணக்கம்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.