SPB Statue Tamil News: ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து மறைந்த 'பாடும் நிலா எஸ்.பி.பி' தன்னுடைய சிலையை வடிவமைக்கக் கடந்த ஜூன் மாதம் அவரே ஆர்டர் கொடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும், தன்னுடைய மரணத்தை முன்கூட்டியே கணித்து விட்டாரா போன்ற பல கேள்விகளும் எழுந்துள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசமாக்கிக்கொண்ட எஸ்.பி.பி, கடந்த 25-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இவருடைய மரணத்தைத் தொடர்ந்து, எஸ்.பி.பி குறித்து பல்வேறு செய்திகள், பேட்டிகள், காணொளிகள் என சமுக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஜூன் மாதமே தன்னுடைய சிலை வடிவமைப்பதற்காக தானே ஆர்டர் கொடுத்திருப்பதாக வெளிவந்த செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தன்னுடைய பூர்வீகமான ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சொந்த வீட்டை, கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்திற்கு வேத பாடசாலை தொடங்குவதற்காகத் தானமாகக் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி. இங்கு, அவருடைய மறைந்த பெற்றோர்களின் சிலையை வைக்க ஆசைப்பட்ட அவர், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட கொத்தப்பேட்டையைச் சேர்ந்த சிற்பி ராஜ்குமார் உடையாரை அணுகி, மறைந்த தன்னுடைய பெற்றோர்களான சாமமூர்த்தி மற்றும் சகுந்தலாவின் சிலைகளைச் செய்வதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் திடீரென்று சிற்பி ராஜ்குமாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட எஸ்.பி.பி தன்னுடைய சிலை ஒன்றையும் செய்யுமாறு கேட்டுள்ளார். கொரோனா காரணமாக ஊரடங்கில் இருப்பதால், நேரில் சென்று அளவுகளைக் கொடுக்க முடியவில்லை என்றாலும் இ-மெயில் மூலம் தன்னுடைய புகைப்படத்தை ராஜ்குமாருக்கு அனுப்பியிருக்கிறார் எஸ்.பி.பி.
அதன் அடிப்படையில், சிற்பி ராஜ்குமாரும் எஸ்.பி.பி சிலையை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து முடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு முழுமையாக முடிந்தபிறகு சிலையை ஒப்படைக்க நினைத்த சிற்பிக்கு, அவருடைய மறைவுச் செய்திதான் சென்றடைந்திருக்கிறது. தற்போது ராஜ்குமார் வெளியிட்டுள்ள எஸ்.பி.பியின் தத்ரூப சிலையின் புகைப்படம்தான் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதமே தன்னுடைய சிலைக்கான ஆர்டரை கொடுத்ததனால், தன்னுடைய மரணம் குறித்து அவர் முன்கூட்டியே கணித்திருக்கிறார் என்று பலரும் நம்புகின்றனர். மேலும், அவருடைய வாழ்க்கை குறித்துப் பல உள்ளுணர்வுகளை கொண்டிருப்பார், அதில் ஒன்றுதான் அவருடைய மரணத்தைப் பற்றி அவர் கணித்திருப்பதும் என்று எஸ்.பி.பிக்கு நெருக்கமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"