எஸ்.பி.பி குணமடைய வேண்டி சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.
Advertisment
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து, அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தகவல் வெளியானது. மேலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியானது. இதனால், திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இதையடுத்து, பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று நேற்று முன்தினம் மாலை இயக்குனர் பாரதிராஜா அழைப்பின் பேரில் இளையராஜா, ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் தினமும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு கூறுகையில், “எஸ்.பி.பி-க்காக சிறப்பு உஷா பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து, தேவசம் போர்டு பணியாளர்கள் கணேஷ் திருவார்ப்பு, சுகுணன், யெதுகிருஷ்ணன் ஆகியோர், சங்கராபரணம் படத்தில் பாடி வெற்றி பெற்ற பாடலான சங்கர நாதசரீரா என்ற பாடலை பாடினார்கள். அப்போது, கோயில் முன்பு தவில் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, எம்.ஜி.எம். மருத்துவமனை எஸ்.பி.பி உடல்நிலை குறித்து இன்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எஸ்.பி.பி-யின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ சிகிச்சையால் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"