Advertisment

"பிடிச்சி உள்ளப் போடுங்க சார்"... ஸ்ரீரெட்டிக்கு எதிராக திரளும் திரையுலகம்

நான் பொறுமையிழந்தால் சுனாமி என்று உறுமியிருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
"பிடிச்சி உள்ளப் போடுங்க சார்"... ஸ்ரீரெட்டிக்கு எதிராக திரளும் திரையுலகம்

பாபு:

Advertisment

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறிய போது ஏற்படாத பதட்டம் நெருக்கடியை, தமிழ் சினிமா பிரபலங்கள் மீது ஸ்ரீரெட்டி கூறிய புகார் ஏற்படுத்தியிருக்கிறது. பிடிச்சி உள்ள போடுங்க சார் என்று காவல்துறைவரைக்கும் சென்றிருக்கிறார்கள்.

ஒரு ஊர்ல ஸ்ரீரெட்டி என்று ஒரு நடிகை இருந்தார் என முன்கதைச் சுருக்கத்துடன் ஆரம்பித்தால் இரண்டு டஜன் அத்தியாயங்கள் எழுத வேண்டியிருக்கும். நல்லவேளையாக தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஸ்ரீரெட்டியின் பிளாஷ்பேக் அத்துபடி என்பதால் நிகழ்காலத்திலிருந்து தொடங்கலாம்.

தெலுங்கு சினிமாவுடன் ஒப்பிடுகையில் தமிழ் சினிமா அத்தனை மோசமில்லை, ஒரேயொருவர் தவிர மற்றவர்கள் என்னிடம் கண்ணியமாகவே நடந்திருக்கிறார்கள் என்று ஸ்ரீரெட்டியின் தமிழ் சினிமா பயணம் இனிமையாகவே ஆரம்பித்தது. ஸ்ரீரெட்டி சொன்ன அந்த ஒரேயொரு ஆள் யார் என்று ஆளாளுக்கு மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி. என்று அடுக்கடுக்காக பெயர்களை கூறி தமிழ் சினிமாவை அதிர வைத்தார். இவர்களில் சுந்தர் சி. மட்டும் அவதூறு வழக்கு தொடர்வேன் என்று நாடகீகமாக ஒரு பதிலை தந்தார். மற்றவர்கள், இவ்வளவு வருஷமா என்ன செய்து கொண்டிருந்தார்? இவருக்கெல்லாம் நான் பதில் சொல்லி மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டுமா? என்று நழுவினர். பொங்கியவர்கள் விஷால், கார்த்தி போன்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள்.

வாய்ப்புக்காக விரும்பியே ஸ்ரீரெட்டி படுக்கைக்கு சென்றுள்ளார். அப்படியிருக்க, இத்தனை வருடங்கள் கழித்து குற்றம்சாட்டுவது ஏன் என்று பொதுமக்களில் பெரும்பாலனவர் ஸ்ரீரெட்டிக்கு எதிராக திரும்பியுள்ளனர். படுத்தால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஸ்ரீரெட்டியின் கருத்து, திறமையையும், உழைப்பையையும் நம்பி சினிமாவில் ஜெயித்த என்னைப்போன்ற கண்ணியமான நடிகைகளை கொச்சைப்படுத்துகிறது என்று யாரும் எதிர்பார்க்காத திசையிலிருந்து அம்புவிட்டார் நடிகை கஸ்தூரி.

இயக்குநர் வாராகி ஸ்ரீரெட்டி மீது காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டி விரும்பியே பலருடன் உறவு கொண்டிருக்கிறார். இது பலாத்காரம் கிடையாது. அவர் மீது விபச்சார தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாராகி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பாலியல் புகார் கூறி தெலுங்கு சினிமாவில் பணம் பறித்தார், இந்தியாவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார் என வாராகி ஸ்ரீரெட்டி மீது புகார்களாக அடுக்குகிறார்.

இயக்குநர் பாரதிராஜா, ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும் என்று ஸ்ரீரெட்டிக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். சினிமாவில் யாரோ ஒருசிலர் மோசமாக இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்த சினிமாவை குறைகூறக் கூடாது என்பது ஸ்ரீரெட்டியை விமர்சிப்பவர்களின் கருத்தாக உள்ளது.

சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. அப்படி படுக்கைக்கு சென்ற பிறகும் வாய்ப்பு தராமல் ஏமாற்றுகிறார்கள் என்பது ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு. சினிமாவில் இருக்கும் கண்ணியவான்களை முன்னிறுத்தி, சினிமாவக்கு கெட்ட பெயரை சம்பாதித்துதரும் அந்த யாரோ ஒருசிலரை கட்டம் கட்டுவதை விட்டு சினிமா பிரபலங்கள் ஸ்ரீரெட்டியை சாடுவது முறையா என்பது ஸ்ரீரெட்டியை ஆதரிப்பவர்களின் கேள்வி.

தமிழ் சினிமாவில் எழுந்திருக்கும் எதிர்ப்பு காரணமாக தனக்குத் தெரிந்த அனைத்து ரகசியங்களையும் வெளியிடும் முடிவில் இருக்கிறார் ஸ்ரீரெட்டி. நான் பொறுமையிழந்தால் சுனாமி என்று உறுமியிருக்கும் அவர் செய்தியாளர்களை சந்தித்து தன்னை ஏமாற்றியவர்கள் குறித்து கூறப் போகிறார்.

ஸ்ரீரெட்டிக்கும், தமிழ் திரைபிரபலங்களுக்குமிடையிலான போர் தொடங்கிவிட்டது... ஆம் போரேதான்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment