/indian-express-tamil/media/media_files/2025/09/06/sridevi-movie-bagubali-2025-09-06-13-52-52.jpg)
இந்திய சினிமாவில் 'பான்-இந்தியா' அலைக்கு வழிவகுத்த திரைப்படம் பாகுபலி. அதன் வெற்றி, அப்படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பெரும் பலனை அளித்தது. ஆனால், அந்த வெற்றியுடன் சேர்ந்து சில சர்ச்சைகளும் எழுந்தன. அதில் ஒன்று, நடிகை ஸ்ரீதேவி அப்படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தது. அப்போது, ஸ்ரீதேவி அதிக சம்பளம் மற்றும் பல நிபந்தனைகள் விதித்ததால் நடிக்க மறுத்ததாகக் கூறப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
தற்போது, ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், இந்தச் செய்திகள் அனைத்தும் படத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பொய்கள் எனத் தெரிவித்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், போனி கபூர், தன் மனைவி அப்படத்தில் நடிக்காததற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் அவருக்குச் சரியான சம்பளம் கொடுக்க முன்வராததுதான் எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ராஜமௌலியுடன் பாகுபலி படம் அமையவில்லை என்றாலும், அவர் எனக்கு அனுப்பிய ஒரு செய்தி இன்னும் என் கையில் உள்ளது. அதில், 'நான் ஸ்ரீதேவி அவர்களின் ரசிகன், ஆனால் அவரிடம் பேசிய பிறகு, என் மரியாதை பல மடங்கு அதிகரித்துவிட்டது' என எழுதியிருந்தார். இதற்குக் காரணம், அவர் கொடுத்த யோசனைகள்தான். தயாரிப்பாளர்கள் உருவாக்கிய குழப்பத்தால்தான் என் மனைவி அந்தப் படத்தில் நடிக்கவில்லை.
ராஜமௌலி எங்கள் வீட்டிற்கு வந்து படம் குறித்துப் பேசினார். அவர் வெளியே சென்ற பிறகு, தயாரிப்பாளர்கள், ஸ்ரீதேவி `இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திற்கு வாங்கிய சம்பளத்தைவிடக் குறைவான தொகையைச் சொன்னார்கள். என் மனைவி அப்போது ஒன்றும் புதிய நடிகை கிடையாது. அவரை வைத்து ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவில் லாபம் பார்க்க நினைத்தார்கள். என் மனைவி ஏன் அந்தப் படத்தில் நடிக்க வேண்டும்?" ஆனால், தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் நாங்கள் கேட்ட தொகையைக் கூறவே இல்லை.
மாறாக, ஸ்ரீதேவி ஹோட்டலில் ஒரு தளம் முழுவதும், ஒரு பெரிய குழுவினரையும் கேட்டதாகச் சொன்னார்கள். உண்மையில், நாங்கள் கேட்டது, பெரிய படப்பிடிப்புகள், எங்கள் குழந்தைகளுக்கு விடுமுறை இருக்கும்போது நடக்க வேண்டும் என்பது மட்டும்தான். இந்தத் தயாரிப்பாளர்கள்தான் ராஜமௌலியிடம் தவறான தகவல்களைக் கொடுத்தவர்கள். ஸ்ரீதேவி என்னென்ன கேட்டார் என ராஜமௌலி ஒரு நேர்காணலில் கூறியது முற்றிலும் பொய். இந்த ஷோபு என்பவர்தான் இதற்குக் காரணம். அவர் அந்தப் பணத்தைக் கொடுக்க விரும்பவில்லை போல. 'அவர் தொழில்முறை இல்லாதவர்' எனக் கூறுவது தவறு.
ராகேஷ் ரோஷன், யாஷ் சோப்ரா, ராகவேந்திர ராவ் போன்றவர்கள் தொடர்ந்து அவருடன் பணிபுரிந்துள்ளனர். அப்படி என்றால் அவர் தொழில்முறை இல்லாதவராக இருக்க முடியுமா?" எனவும் போனி கபூர் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீதேவி அதிக நிபந்தனைகள் கேட்டதாகக் கூறப்பட்ட சர்ச்சை, `பாகுபலி’ இரண்டு பாகங்களும் வெளியானபோது பேசும்பொருளானது. அப்போது, ஒரு நேர்காணலில் ராஜமௌலி, ஸ்ரீதேவி ரூ.10 கோடி சம்பளம், ஹோட்டலில் ஒரு தளம் முழுவதும் மற்றும் 10 விமான டிக்கெட்டுகளைக் கேட்டதாகக் கூறினார்.
இந்த கருத்துக்களால் ஸ்ரீதேவி மிகவும் வருத்தமடைந்தார். ஒரு தெலுங்கு சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், "நான் 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இப்படிப்பட்ட நிபந்தனைகளை நான் வைத்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? அப்படியிருந்தால், இந்தத் துறையே என்னை விரட்டியடித்திருக்கும். ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களை உங்களைப் பற்றி நீங்கள் கேட்கும்போது, அது உண்மையிலேயே வலிக்கிறது.
தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் தவறாகக் கூறினார்களா அல்லது ஏதேனும் தகவல் தொடர்பு குழப்பம் இருந்ததா என எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேசுவது நல்லதல்ல என நினைக்கிறேன் என்று கூறியிருந்தார், பின்னர், ராஜமௌலி தனது நேர்காணலில், ஸ்ரீதேவி குறித்துப் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற தகவல்களைப் பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது எனவும் ஒப்புக்கொண்டார். ஸ்ரீதேவி தனது 54-வது வயதில் 2018-ல் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.