/indian-express-tamil/media/media_files/2025/08/12/prasanth-2025-08-12-17-45-24.jpg)
கலா மாஸ்டர், இந்தியத் திரையுலகின் தலைசிறந்த நடன இயக்குநர்களில் ஒருவர். நடனக்கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளையும், திரையுலகில் அவர் கடந்து வந்த 40 ஆண்டுகாலப் பயணத்தையும் போற்றும் விதமாக ஒரு பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்ற வீடியோ சினி உலகம் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள், அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களையும், கலா மாஸ்டரின் மீதான தங்கள் அன்பையும் வெளிப்படுத்தினர்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் கலா குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறினார். கலா மாஸ்டரின் நடனத் துறைக்கான அர்ப்பணிப்பையும், தனது குடும்பத்தின் மீது அவர் கொண்ட அன்பையும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். அவர் ஒரு திறமையான கலைஞராக மட்டுமல்லாமல், தனது ஏழு சகோதரிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்ததை பலரும் குறிப்பிட்டனர். மேலும், அவர் தனது நடனப் பள்ளிகள் மற்றும் நடனக் கலைஞர்கள் சங்கம் மூலமாகப் பல திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, நடன உலகிற்கு அளித்த பங்களிப்புகள் குறித்துப் பேசப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று, நடிகர் பிரசாந்த் பங்கேற்ற "ஸ்டார் நைட்" நிகழ்ச்சிகள் குறித்த நினைவுகூரல் தான். தியாகராஜன் தயாரித்த இந்த நிகழ்ச்சிகள், இந்தியாவில் முதன்முதலாக நடத்தப்பட்டது என்றும் கூறினார். பிரசாந்த் மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் 45 நடனங்களை ஆடியது ஒரு தனித்துவமான சாதனையாகக் குறிப்பிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு கலா மாஸ்டர் மற்றும் அன்றைய டாப் ஹீரோயின்களும் ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என ஒட்டுமொத்தக் குழுவின் உழைப்புமே காரணம் என்றும் பாராட்டினார். பார்வையாளர்களுடன் பிரசாந்த் இணைந்து நடனமாடியது போன்ற சுவாரஸ்யமான தருணங்களும் நினைவுகூரப்பட்டன.
கலா மாஸ்டரின் சாதனைகளைப் போற்றும் விதமாக, தியாகராஜன் அவருக்கு "நடனக் கலை அரசி" என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார். இது அவரது நடனத் துறைக்கான பங்களிப்புகளுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது. விழாவின் இறுதிப் பகுதியில், "ஸ்டார் நைட்" நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகைகளான தேவயானி, மீனா, மற்றும் ரோஜா ஆகியோர் மேடையில் மீண்டும் ஒன்றிணைந்து நடனம் ஆடினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.