/indian-express-tamil/media/media_files/2025/09/09/hollywoord-2025-09-09-16-33-02.jpg)
ஹாலிவுட்டில், கடந்த 1975-ல் வெளியான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான திகில் திரைப்படம் ஜான்ஸ் (Jaws), இந்த படம், இன்றும் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. ஆனால், அப்படத்தில் நடித்தவர்களில் அதிகபட்ச லாபம் ஈட்டியவர் ஜெஃப்ரி வூர்ஹீஸ். 12 வயதில் அப்படத்தில் சுறாவால் கொல்லப்படும் அலெக்ஸ் கின்ட்னர் என்ற சிறுவனாக அந்த சிறுவனுக்கு தற்போது 62 வயதாகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இந்த படத்தில் அந்த ஒரு சிறிய கேரக்டரின் மூலம், வரும் ராயல்டி மற்றும் பிற வருமானங்கள், அவரை தனது உணவகத் தொழிலில் இருந்து ஓய்வுபெறச் செய்துள்ளன. 1970களின் தொடக்கத்தில் ஜான்ஸ் திரைப்படம் படமாக்கப்பட்ட மாசாச்சூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள மார்த்தாஸ் வைன்யார்ட் என்ற தீவிலேயே வூர்ஹீஸ் இன்றும் வசித்து வருகிறார். அப்படத்தில் அவர் நடித்தது, "சுறாவால் கொல்லப்படும் இரண்டாவது குழந்தை" கதாபாத்திரத்தில் தான். அதுதான் அவர் நடித்த ஒரே திரைப்படமமும் கூட.
இதனிடையே, இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஜான்ஸ் படம் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "செத்துப் போறதுக்கு பணம் கிடைக்குது" என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். ஜான்ஸ் படத்தின் ராயல்டி மட்டுமல்லாமல், 2017 முதல் ரசிகர் மாநாடுகளிலும் (fan conventions) அவர் கலந்துகொண்டு வருகிறார். "இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று முதலில் சொன்னேன், பின்னர் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம் என நினைத்தேன்" என்று அவர் தி இண்டிபெண்டண்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தற்போது, ஒரு மாநாட்டுக்கு அவருக்கு 10,000 டாலர்கள் (சுமார் 8.3 லட்சம் ரூபாய்) வரை வருமானம் கிடைக்கிறது. இதில் விமானக் கட்டணம், ஹோட்டல் செலவுகள் ஆகியவை சேர்க்கப்படவில்லை. மேலும், பிரபலங்களின் வீடியோ பகிர்வு இணையதளமான கேமியோ (Cameo) மூலமாகவும் அவர் தனிப்பயனாக்கப்பட்ட வீடியோக்களை அனுப்புகிறார். ஒரு வீடியோவுக்கு 35 டாலர்கள் (சுமார் 2,900 ரூபாய்) கட்டணம் வசூலிக்கிறார். இதுபோல ஒரு நாளில் 25 கோரிக்கைகள் வரை வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த வருமான ஆதாரங்கள் காரணமாக, ஜான்ஸ் திரைப்படத்தின் வணிகப் பொருட்களை விற்க, அவர் தனக்கென ஒரு இணையதளத்தையும் தொடங்கினார். அங்கு, 30 முதல் 60 டாலர் மதிப்பிலான குவளைகள், 35 டாலர் மதிப்பிலான சுவரொட்டிகள், 70 டாலர் மதிப்பிலான டி-ஷர்ட்கள் ஆகியவற்றை அவர் விற்பனை செய்கிறார். இதில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பொருள், சுறா கடித்தது போன்ற அடையாளம் கொண்ட காற்று நிரப்பக்கூடிய லைஃப் ராஃப்ட். இதன் விலை 289 டாலர்கள்.
கின்ட்னர் கொல்லப்பட்டதைப் போன்ற மஞ்சள் நிற லைஃப் ராஃப்டை ஒரு பெண்மணி அவரிடம் கொண்டு வந்ததாகவும், "அந்தப் பெண் கண்ணீர் விட்டதால், நான் அதில் கையெழுத்திட்டேன்" என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். சில சமயங்களில் "அதோ அங்க போறார் பாருங்க, அவர் தான் இறந்துபோன அலெக்ஸ் கின்ட்னர்!" என மக்கள் பேசுவதையும் கேட்டுள்ளதாக அவர் வியந்து கூறுகிறார். சிகாகோவில் இருந்து 14 வயதுப் பெண் ஒருவரை அவரது பெற்றோர் 5 மணி நேரம் காரில் அழைத்து வந்து தன்னை சந்தித்தபோது, அந்தப் பெண் நெகிழ்ந்துபோன சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.
வூர்ஹீஸின் வாழ்க்கை குறித்து ஒரு ஆவணப்படமும் தற்போது தயாராகி வருகிறது. ஹாலிவுட் படங்களில் சிறுவயதில் வந்து லாபம் ஈட்டிய ஒரே குழந்தை நட்சத்திரம் இவர் மட்டும் இல்லை. 1994-ல் வெளியான டிஸ்னி அனிமேஷன் திரைப்படமான தி லயன் கிங் படத்தில் சிம்பா கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்த ஜேசன் வீவர், 2 மில்லியன் டாலர்களுக்கு மேல் ராயல்டி பெற்றுள்ளார் என தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சூப்பர்பேடு திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேசி மார்கோலிஸ் கூட, அதன் மூலம் ஒரு லட்சம் டாலர் ஈட்டியுள்ளார்.ஆனால், தற்போதைய குழந்தை நட்சத்திரங்களுக்கு இத்தகைய பலன்கள் கிடைப்பதில்லை. ஓடிடி தளங்களில் ஒருமுறை வெளியாகும் படங்கள், தொடர்களுக்கு அதிக ராயல்டி வழங்கப்படுவதில்லை. மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் மிகக் குறைவு. ஆகவே, வூர்ஹீஸ் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.