/indian-express-tamil/media/media_files/RvWDlItp0XSR0HrceGOM.jpg)
90-களில் தமிழ் சினிமாவை மிரள வைத்த அதிரடி இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கே. செல்வமணி, கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை பதித்தார். விஜயகாந்தின் 125-வது படமான இது, அவரது 'கேப்டன்' பட்டத்தை மேலும் உறுதிப்படுத்தியது. வனக்கடத்தல் வீரப்பனை எதிர்த்துப் போராடும் ஒரு காவல் அதிகாரியின் கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம், சமீபத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. திரையரங்குகளில் அன்றும் இன்றும் எதிரொலிக்கும் அந்தப் படத்தின் பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதையை இயக்குனர் செல்வமணி சினி உலகம் யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்பு ஒரு பாடல் தேவைப்பட்டபோது, இயக்குனர் செல்வமணி இசையமைப்பாளர் இளையராஜாவிடம், ஷோலே படத்தில் வரும் "மெஹபூபா மெஹபூபா" பாடலைப் போல் வேகமான ஒரு பாடலை எதிர்பார்த்துக் கேட்டுள்ளார். இளையராஜா முதலில் ஒரு பாடலை அனுப்பி வைத்துள்ளார், ஆனால் அது மிகவும் மெதுவாக இருந்ததால், "இந்தப் பாட்டு நல்லா இல்ல, நான் ஷூட் பண்ண மாட்டேன்" என்று செல்வமணி இளையராஜாவிடம் நேரடியாகக் கூறிவிட்டார். பொதுவாக, படப்பிடிப்புத் தளத்தில் இசையமைப்பாளருக்குத் தெரியாமல் நடக்கும் மாற்றங்கள் குறித்து இளையராஜாவுக்கு ஏற்கனவே கோபம் இருந்துள்ளது. இந்த மறுப்பைக் கேட்டதும், இளையராஜா, "ரெக்கார்ட் பண்ணும்போது யாரும் இருக்க மாட்டீங்க, ஆனா பாட்டு சரியில்லைன்னு சொல்றீங்களா?" என்று சற்று கோபத்துடன் பேசியுள்ளார்.
இயக்குநரின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட இளையராஜா, ஒரே ஒரு இரவில் மிகப்பெரிய ஒரு அதிசயத்தைச் செய்ததாக தெரிவித்தார். செல்வமணியின் கோரிக்கையை ஏற்று, அந்த இரவே அவர் ஒரு புதிய மெட்டை உருவாக்கி, அடுத்த நாள் காலையிலேயே பாடலை பதிவு செய்துவிட்டார். மாலையில், அந்தப் பாடல் மிக்ஸ் செய்யப்பட்டு, உடனடியாக விமானம் மூலம் மதுரைக்கு வந்து கொடுத்துள்ளார்.
அப்படி, ஒரே இரவில் இளையராஜாவின் மேஜிக்கால் உருவான அந்தப் பாடல்தான், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் "ஆட்டமா தேரோட்டமா". இந்தப் பாடல், படம் வெளியான காலத்திலும், தற்போது சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்கள் மூலமும் வைரலாகப் பரவி வருகிறது. கேப்டன் பிரபாகரன் திரைப்படம், அதன் கதைக்களம், நடிகர் விஜயகாந்தின் மிரட்டலான நடிப்பு, மற்றும் இளையராஜாவின் இசையால் இன்றும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, "ஆட்டமா தேரோட்டமா" போன்ற பாடல்கள், அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததை மறுக்க முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.