தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி சினிமாக்கள் என 1,500க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணிபுரிந்த பிரபல மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் கே.கே. ஜூடோ ரத்தினம், தமிழ் சினிமாவில் நடிகர்கள் டி.ராஜேந்தர் – சத்யராஜ் இடையே வெடித்த மோதல் உள்ளிட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார்.
இன்றைய 90ஸ் கிட்களும் 2கே கிட்ஸ்களும், நடிகர் டி. ராஜேந்தரை மீம்ஸ்கள் போட்டு கலாய்த்தாலும், அவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கான ராஜபாட்டையே தானே அமைத்துக்கொண்டு தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டராக வலம் வந்தவர். ஆம், இயக்குனர் டி.ராஜேந்தர் தனது படங்களில் நடிகராக மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவு என ஆல் இன் ஆல்-ஆக இருந்தார். அவருடைய படங்கள் திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. அன்றைக்கு, டி.ராஜேந்தரின் அடுக்குமொழி வசனத்துக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். சண்டைக் காட்சிகளில்கூட “வாடா என் மச்சி, வாழக்கா பஜ்ஜி, உன் ஒடம்ப போட்டுடுவேன் பிச்சி” என்று அடுக்குமொழி பஞ்ச் வசனம் பேசி அன்றைய ரசிகர்களைக் கவர்ந்தவர். டி.ராஜேந்தர் இயக்கிய அண்ணன், தங்கச்சி, தாய்ப்பாசம் செண்டிமெண்ட், காதல், படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. என் தங்கை கல்யாணி, தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, ஒரு தாயின் சபதம் உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.
டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவை தனது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் தானே அமைத்துக்கொண்ட ராஜபாட்டையில் வலம் வந்த டி.ராஜேந்தர், திமுகவில் இருந்து விலகி லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி நடத்தி வருகிறார். கடைசியாக வீராசாமி என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். அதற்கு பிறகு, சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதே போல, தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்து இன்று முக்கிய குணச்சித்திர நடிகராக இருக்கிறார் நடிகர் சத்யராஜ். இவருடைய தகடு தகடு வசனம் இன்றைக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இப்படி, தமிழ் சினிமாவில் இன்றைக்கும் முக்கிய நடிகர்களாக உள்ள டி.ராஜேந்தர் – சத்யராஜ் இடையே வெடித்த மோதல் குறித்து மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரகசியம் ஒன்றைக் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி சினிமாக்கள் என 1,500க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணிபுரிந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் கே.கே. ஜூடோ ரத்தினம். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த்,
தற்போது 92 வயதாகும் ஜூடோ ரத்தினம் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்தான், டி.ராஜேந்தர் – சத்யராஜ் இடையே வெடித்த மோதல் குறித்த ரகசியத்தைக் கூறியுள்ளார்.
அதில் ஜூடோ ரத்தினம் கூறியிருப்பதாவது: “நான் பல நடிகர்களின் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளேன். டி ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதம், உயிருள்ள வரை உஷா இரண்டு படங்களுக்கும் நான் தான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தேன். அந்தப் படங்களில் சத்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் இடையே சண்டைக் காட்சி நடந்தது. அதற்கு நான் பக்குவமாக எப்படி பண்ணனும் என்றும் எந்த அளவுக்கு செய்யணும் என்றும் எல்லாமே பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தேன்.
ஆனால், டி ராஜேந்தர் வேகமாக சத்தியராஜ் வயிற்றில் குத்தி விட்டார். இதனால் சத்தியராஜ் கோபமடைந்து டி ராஜேந்தரை ‘மனுஷனாடா நீ, என்ற இப்படி வயித்துல குத்தர’ன்னு பயங்கரமாக திட்டிவிட்டார். உடனே சத்யராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு போய் விட்டார். பிறகு சத்யராஜ்ஜை சமாதானப் படுத்தி அதற்கு பிறகு தான் நடிக்க வைத்தார். அதே மாதிரி, ஜிப்பின் மேல் நின்று குதிக்கும் காட்சிகளில் டி ராஜேந்தர் நான்தான் குதிப்பேன் என்று சொன்னார்.
நாங்கள் வேண்டாம், உங்களால் முடியாது, பிரச்சனை வரும் என்று நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. பின் ஜீப் மேல் இருந்து குதித்தார். பிறகு டி ராஜேந்தர் கீழே விழுந்து கால் உடைந்துவிட்டது. நாம சொன்னால் கேட்டால் தானே” என்று கூறியுள்ளார்.
மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம், நடிகர்கள் டி ராஜேந்தர் – சத்யராஜ் இடையே ஒரு சண்டைக் காட்சியில் டி.ராஜேந்தர் உண்மையாகவே அடித்துவிட அதற்கு சத்யராஜ் கோபடைந்து டி.ராஜேந்தரை திட்டிய ரகசியத்தை கூறியது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“