VJ Chitra Suicide - Fans Questions Police Tamil News : பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது திரைத்துறை உலகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 28 வயதான சித்ரா, நசரேத்பேட்டையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வி.ஜே. சித்ரா ஈ.வி.பி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று அதிகாலை 2:30 மணிக்குத் தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அவர், தன்னுடைய வருங்கால கணவரும் தொழிலதிபருமான ஹேமந்த் உடன் தங்கியிருக்கிறார். கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இவர்களுக்கு,வருகிற ஜனவரியில் திருமண நாள் குறிக்கப்பட்டது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காவல்துறைக்கு அளித்த அறிக்கையில், படப்பிடிப்பிலிருந்து திரும்பியவுடன் தான் குளிக்கப் போவதாக சித்ரா தன்னிடம் கூறியதாக ஹேமந்த் கூறியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சித்ரா வெளியே வராததாலும், கதவைத் தட்டியபோது பதிலளிக்காமல் இருந்ததாலும், ஹேமந்த் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து, மாற்றுச் சாவியுடன் கதவைத் திறந்திருக்கின்றனர். அப்போது சித்ரா மின்விசிறியில் துணியைக்கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Fans Questions VJ Chitra Suicide
நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' உள்ளிட்ட சில சின்னதிரை தொடர்களிலும் நடித்துள்ளார் என்றாலும், ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் 'முல்லை' கதாபாத்திரம்தான் மக்கள் மத்தியில் அவருக்கான தனி இடத்தைக் கொடுத்தது. சித்ராவைவிட முல்லை என்கிற பெயரில்தான் அதிகம் அழைக்கப்பட்டார்.
குறிப்பாக இவருக்குப் பெண் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில்கூட தன் ரசிகை ஒருவருடைய பிறந்தநாளுக்குச் சென்று, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சித்ரா. அவருடைய இந்த செயல்கள் மேலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அதிகரிக்கவே செய்தன. இந்நிலையில் சித்ரா தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமுக வலைத்தளங்கள் யாவும் இரங்கல் செய்திகளால் நிரம்புகின்றன.
"ஆற்றல் நிறைந்த வாழ்க்கை மிக விரைவில் பறிக்கப்படும் போது, அவர்களை வெகு தொலைவில் தள்ளப்படுவது எது? அவர் யாரையாவது அணுகியிருப்பார் என்று நினைக்கிறேன். அவரை தனிப்பட்ட முறையில் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, ஆனால் வலியை உணர்கிறேன். நீங்கள் தேடியதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று நம்புகிறேன்." என்று குஸ்பு ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவுடன் இணைந்து நடித்த ஹேமா சதீஷின் இன்ஸ்டாகிராம் பதிவு.
ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படும் பிரபலங்கள் ஜியா கான் மற்றும் பிரதியுஷா பானர்ஜி ஆகியர்களுக்கு இருந்த அதே போன்ற காயங்கள். இது தற்கொலை அல்லது கொலை என்பதை ஒருவர் எவ்வாறு தீர்மானிக்க முடியும்! கழுத்தில் O அல்லது U தழும்புகள் எங்கே? தற்கொலைக் குறிப்பு எங்கே? தவறான கதைகளை விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கொந்தளிக்கிறார் ஒரு ரசிகர்.
சிலர் சித்ராவின் நிச்சயதார்த்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று இரவு சித்ரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர். இதனால் தற்கொலை என்று எப்படி சொல்ல முடியும் என்கிற குழப்பம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"