எதிர்நீச்சல் சீரியல் நடிகை மோனிஷா விஜய் நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு தன்னைப் பற்றி பேசிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் மாரிமுத்து. சீரியல்கள் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார்.
இதனையடுத்து எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் ஆதிகுணசேகரனாக மாரிமுத்துவை மிஸ் செய்து வருகின்றனர். இதேபோல், அவரோடு சீரியலில் ஒன்றாக நடித்தவர்களும் அவர் இல்லாததை நினைத்து வருத்தப்படுகிறார்கள். மாரிமுத்து சீரியலில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் குழந்தைத்தனமாகத்தான் சக நடிகர்களோடு பேசி பழகி இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்த போது அவருக்கு மகளாக நடித்த மோனிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய வீடியோவை மோனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மாரிமுத்து இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மோனிஷாவின் பிறந்தநாள் வருவதற்கு முன்பே அவருக்காக மாரிமுத்து வீடியோ அனுப்பி இருப்பதாக மோனிஷா கூறியிருக்கிறார்.
/indian-express-tamil/media/post_attachments/7b78e50e-5e7.jpg)
அதில் மாரிமுத்து பேசுகையில், மோனிஷா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என்னால் உன்னுடைய பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை. மோனிஷா நீ ரொம்ப திறமையான பொண்ணு. அதனாலதான் இந்த வீடியோ அனுப்புறேன். மோனிஷா, நீ எனக்கு சீரியலில் மகளாக நடித்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் நிஜத்தில் நீ எனக்கு மகளாக பிறக்கவில்லையே என்று பல நாட்கள் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு விதத்தில் பொறாமைப்பட்டேன் என்றும் கூட சொல்லலாம்.
ஏன்னென்றால், உனக்கு அவ்வளவு திறமை இருக்கிறது. நீ நன்றாக படிக்கக்கூடிய பொண்ணு. விளையாட்டிலும் வேற லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறதா. உனக்கு எத்தனை கலைகள் தெரியும் என்று நீ ஒவ்வொரு நாளும் சொல்லும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. நீயும் உன்னுடைய அக்கா வர்ஷாவும், எத்தனையோ விளையாட்டுகளில் கலந்து கொள்ளுறீங்க. எல்லா திறமையும் உள்ள முழு நிறைவான ஒரு பெண்ணா நான் உன்னை பார்க்கிறேன்.
/indian-express-tamil/media/post_attachments/755390a8-ac4.jpg)
உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய அளவில் வரவேண்டும். பி.டி உஷா, கல்பனா சாவ்லா மாதிரி, இந்தியாவிலிருந்து எத்தனை பெண்கள் சாதித்து இருக்காங்களோ, அந்த மாதிரி நீயும் சாதிக்கப் போறது எனக்கு தெரியும். அது நீ நடிகையா சாதிக்க போறியா? இல்ல விளையாட்டு வீராங்கனையா சாதிக்க போறியா? இல்ல அதை தாண்டி மூன்றாவதாக வேற ஏதாவது திறமையில் சாதிக்க போறியா என்று எனக்கு தெரியல.
மோனிஷா நீ ஆல் இந்தியா லெவலில் பல பதக்கங்களை பெற்றிருக்கா. இன்னும் அதிகமாக நீ வெற்றி பெறுவ. அதுவும் சமீப காலமாக ஆறு ஏழு எபிசோடுகளாக எதிர்நீச்சல் சீரியலில் பின்னி பெடல் எடுத்துட்ட. அது சம்பந்தமாக உன்கிட்ட பேசி இருக்கேன். வாழ்த்துக்கள் மோனிஷா. என்னுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்பவும் உண்டு. இவ்வாறு மறைந்த நடிகர் மாரிமுத்து அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மோனிஷா, ”இந்த ஆசீர்வாதம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும். தற்செயலா சில மாதங்களுக்கு முன்பு என் சகோதரியின் பிறந்தநாளுக்கு மாரிமுத்து சார் அக்காவுக்கு பதிலாக எனக்கு வாழ்த்தினார். மேலும் எனது வரவிருக்கும் பிறந்தநாளுக்கு இந்த வீடியோவை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். அவர் இந்த உலகத்தை விட்டு பிரியும் முன் என்னை எப்படி வாழ்த்தினார் என்று எனக்கே தெரியவில்லை. அவரது ஆன்மா சொர்க்கத்தில் இருந்து என்னை ஆசீர்வதிக்கும்,” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு அதிகமானோர் தங்களுடைய வருத்தங்களையும் மோனிஷாவிற்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“