Lakshmi Stores Serial: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலை நடிகை குஷ்பு தயாரித்து நடிக்கிறார். சினிமா பாணியில் இதில் வரும் வீடுகளும், போடப்படும் செட்டும் வித்தியாசமான முறையில் பிரமாண்டமாக இருக்கும்.
பொதுவாக எந்தவொரு சீரியலையும் ஒரு வருடத்திற்கு மேல் இழுக்க மாட்டார் குஷ்பு. ”தனக்கு சின்னத்திரையில் பெரிதாக விருப்பம் இல்லை என்பதாலா அல்லது, எல்லா சீரியலையுமே ஜவ்வு மாதிரி தான் இழுக்குறாங்க, அதனால நம்மளாச்சும் சீக்கிரம் முடிப்போம்ங்கற” எண்ணத்தினாலா எனத் தெரியவில்லை. இதற்கு முன் குஷ்பூ தயாரித்து நடித்த ‘நந்தினி’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தும் கூட ஒரு வருடத்தில் முடித்து விட்டார்கள்.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலை மேலும் அரை மணி நேரம் அதிகரித்து, மொத்தம் 1 மணி நேரமாக ஒளிபரப்ப இருக்கிறார்களாம். அதாவது இனி இரவு 9 மணி முதல் 10 மணி வரை லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகும்.
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் ப்ரியா, குஷ்பூவின் சொந்த மகள் இல்லை என்றும், குஷ்பூவின் கணவர் தேவராஜுக்கும், டாக்டர் ஷியாமளாவுக்கும் பிறந்த குழந்தை தான் அது, என்ற ட்விஸ்ட் அவிழ்க்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் ஃப்ளாஷ்பேக் கதையை விரிவாக சொல்ல அரை மணி நேர ஸ்லாட் போதாது என்று சேனல் தரப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம். பின்னர் இருதரப்பும் கலந்து பேசி, 1 மணிநேரமாக சீரியலை நீட்டிக்கலாம் என்ற முடிவெடுத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மையான காரணம் இது தானா? அல்லது சினிமாவில் நடிக்க / தயாரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாரா குஷ்பூ எனத் தெரியவில்லை. இதற்கிடையே அந்த அரை மணி நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் எந்த நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை…