Nayagi Serial: சினிமா, வெப் சிரீஸ், இண்டெர்நெட் என பொழுது போக்குக்கான தளம் நாளுக்கு நாள் பறந்து விரிந்தாலும், டி.வி சீரியல்களின் மவுசு குறையவேயில்லை. முன்பு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத் தான் சேனல்களும், அவற்றில் ஒளிபரப்பப்படும் சீரியல்களும் இருந்தன. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. கணக்கிலடங்கா சேனல்கள், எண்ணிலடங்கா தொடர்கள்.
அம்மா, பாட்டி, அத்தை, சித்தி, பெரியம்மா என பெண்கள் உலகை ஆக்கிரமித்த இந்த தொலைக்காட்சித் தொடர்கள், இன்றைக்கு அப்பா, தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா என நம் வீட்டு ஆண்களையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு ஏன், எல்.கே.ஜி படிக்கும் குழந்தை கூட, குறிப்பிட்ட ஏதோவொரு சீரியலின், குறிப்பிட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கியிருக்கிறது.
இது ஒருபுறமிருக்கட்டும், தமிழ் தொலைக்காட்சி தொடர்களை எடுத்துக் கொண்டால், சன் டி.வி-க்கு தனி இடமுண்டு. அந்த வகையில் தற்போது ‘நாயகி’ சீரியலின் மூலம் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் 8.30 வரை பிரைம் டைமில் இந்த நாயகி சீரியல் ஒளிபரப்பாகிறது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும், இந்த சீரியலை எஸ்.குமரன் இயக்கி வருகிறார். நந்தன் ஸ்ரீதரன் வசனம் எழுத, வி.கே.அமிர்த்ராஜ் திரைக்கதை அமைக்கிறார்.
ஆனந்தி, வசந்தி, சற்குணம் என்ற மூன்று பெண்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், ஆனந்தியாக நடிகை வித்யா பிரதீப் நடித்து வருகிறார். அம்பிகா, திலீப் ராயன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
வீடுகளில் இந்த சீரியல் முதலிடம் பிடித்திருந்தாலும், சமீப நாட்களில் நாயகி தொடர் சற்று போரடிக்கிறது என்பதே தாய்மார்களின் கருத்து. ஒரு மெகா சீரியலில் வரும் அத்தனை முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுவிட்ட நிலையில், எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போவது தான் அதற்குக் காரணம்.
ஆனந்திதான் திருவின் அப்பா கலிவரதனின் சொத்துக்களுக்கு வாரிசு என்கிற சுவாரஸ்யம் தெரிந்து விட்டது. பல போராட்டங்களை சந்தித்த ஆனந்தி கர்ப்பமும் ஆகிவிட்டார். இப்படி பல இண்ட்ரெஸ்டிங் விஷயங்கள் எல்லாம் முழுமை அடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்தத் தொடருக்கு முற்றும் எனப் போடுவார்களா அல்லது, கமா வைத்து கதையில் அதிரடி கூட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.