தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் கடந்த சில வாரங்களாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது சன் டிவியின் ரோஜா சீரியல் முந்திக்கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டிவியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து அதன் டி.ஆர்.பி ரேட்டிங் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய ஒளிபரப்பு ஆராய்ச்சி அமைப்பு ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் செயல்படும் டிவிக்களில் அதிகமாக பார்க்கப்படும் டிவி, அதிகமாக பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தைப் பிடித்தவைகளை அறிவிக்கிறது.
இந்திய ஒளிபரப்பு ஆராய்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக வெளியான புள்ளிவிவரங்களின்படி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல்தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்து இருந்தது. ஆனால், தற்போது, இந்த வாரம் வெளியான புள்ளிவிவரங்களின்படி, பாரதி கண்ணம்மா சீரியல் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய ஒளிபரப்பு ஆராய்ச்சி அமைப்பு மார்ச் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சன் டிவியின் ரோஜா சீரியல் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது. 2ம் இடத்தை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது. 3வது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பான சண்டக்கோழி திரைப்படம் பிடித்துள்ளது. 4வது இடத்தையும் 5வது இடத்தையும் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல, பூவே உனக்காக ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. முதல் 5 இடங்களில் 1,4,5 இடங்களைய சன் டிவி சீரியல்களே இடம்பிடித்துள்ளது. அதே போல, அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் டிவி டி.ஆர்.பி ரேடிங்கில் சன் டிவி தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வருகிறது.