நவீன் சரவணன்
Thalainagaram 2 movie review: 2006-ல் வெளிவந்த "தலைநகரம்" திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கதையை தழுவி எடுக்கப்பட்ட "தலைநகரம் 2"படம் இன்று வெளியாகி இருக்கிறது, இப்படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளதா? என்பதை இவ்விமர்சனத்தில் காணலாம்.
கதைக்களம் :
தலைநகரம் முதல் பாகத்தில் வட சென்னையின் மிகப் பிரபலமான ரவுடியாக ரைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுந்தர் சி, இந்தப் படத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரியாக வருகிறார். இந்நிலையில் தென் சென்னை,வடசென்னை, மத்திய சென்னை என மூன்று பகுதிகளையும் மூன்று பெரிய ரவுடிகள் கைவசம் வைத்திருக்கின்றனர். இவர்கள் மூவருக்குள்ளும் பிரச்சனை ரைட், அதன்பிறகு இந்த மூவரையும் எதிர்க்க மீண்டும் ரௌடியாக களம் இறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
எப்போதுமே ஜாலியாக பார்த்த சுந்தர்சியை இப்படத்தில் ஒரு இடத்தில் கூட நாம் ஜாலியாக பார்க்க முடியாது எப்போதுமே இறுக்கமான முகத்துடன் கம்பீரமான நடையுடன் ஒரு ரவுடிக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் எதிரிகளை பறக்க விட்டு நொறுக்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல பில்டப் காட்சிகளில் மாஸ் ஹீரோக்காண அடையாளத்துடன் அசத்தியிருக்கிறார். மூன்று வில்லன்களில் பாகுபலி பிரபாகரன் மட்டுமே நமக்கு தெரிந்த அடையாளம். நாயகிக்கு நடிக்க ஒரு சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா படத்தில் இருந்தாலும் பெரிய அளவு அவரால் சோபிக்க முடியவில்லை.
இயக்கம் மற்றும் இசை :
ஒரு சாதாரண இளைஞன் எப்படி மிகப்பெரிய ரவுடியாக மாறுகிறான் என்பதே தலைநகரம் 1 படத்தின் கதை.இப்படமும் அதை தழுவியே எடுக்கலாம் என இயக்குனரின் யோசனை சரியாக இருந்திருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் டான் அசோக்கிற்குத்தான் மிகப்பெரிய வேலை இருந்திருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். ஜிம்ரனின் பின்னணி இசை பல இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது, குறிப்பாக இப்படத்தின் BGM பல காட்சிகளை ஒரு படி மேலே எடுத்துச் சென்றிருக்கிறது.
படம் எப்படி :
தலைநகரம் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடி ஒரு மிகப்பெரிய பலமாக இருந்தது.ஆனால் இப்படத்தில் காமெடி காட்சிகள் இல்லை என்பதே இப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது. அதையும் தாண்டி ரவுடிகளுக்கு இடையேயான பிரச்சனை தான் படம் என்பதால் நிறைய வன்முறை காட்சிகளும், கிளாமர் காட்சிகளும் நம்மை சோதிக்கிறது. என்னதான் முதல் பாதி சற்று விறுவிறுப்பாக நம்மை வைத்திருந்தாலும், இரண்டாம் பாதியில் பலவீனமான திரைக்கதை மற்றும் யூகிக்கக்கூடிய காட்சிகள் என சொதப்பி இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் கொஞ்சம் கதையையும்,நிறைய சண்டையையும் கொடுத்து நம்முடைய நேரத்தை வீணடித்திருக்கிறார் இயக்குனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.