நடிகை ராதிகா நடிப்பில் சி.ஜே பாஸ்கர் இயக்கத்தில் 90களின் இறுதியில் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா ஹிட் சீரியல் சித்தி. அதை தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் சித்தி -2 சீரியல் ஆரம்பமானது. ஒளிபரப்பு தொடங்கிய சில மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. அதனை தொடர்ந்து சீரியலில் ராதிகா கணவராக நடித்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கேரக்டர்கள் மாற்றப்பட்டு ஜூலை 2020ல் ஷூட்டிங் தொடங்கியது.
Advertisment
டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பிய இந்த தொடரில் இருந்து விலகுவதாக கதாநாயகி ராதிகா சரத்குமார் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக இருந்தது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ராதிகா "மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன்", சித்தி 2 மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்.ஆனால், சீரியல் தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
ராதிகா விலகினாலும் கவின் வெண்பா ஜோடியால் அதே டிஆர்பியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புடன் இந்த தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து ராதிகா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நடிகை ரம்யா கிருஷ்ணன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயரும் அக்கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் சித்தி 2 சீரியலில் புதிதாக மிகப் பெரிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை சித்தி 2 சீரியல் நடிகர்கள் தங்களின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்த நிலையில் சன் டிவி இதனை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த பதிவில் "சித்தி-2 தொடரில் புதிதாக வரப்போகும் அந்த ஒருவர் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அது கவினின் மற்றொரு ரோல் டபுள் வேடத்தில் நடிக்க உள்ளார் என கூறி வருகின்றனர். யாழினிக்கு ஜோடியாக மற்றொரு கவின் கேரக்டரை கொண்டு வந்தால் சித்தி 2 பார்க்கமாட்டோம் என அந்த சீரியல் ரசிகர்கள் இன்ஸ்டாவில் கமெண்ட்ஸ் போட்டு புலம்பி தள்ளுகின்றனர்.
இதனால் அந்த புதிய பிரபலம் யார் என்கிற எதிர்பார்ப்பு சித்தி 2 சீரியல் பேன்ஸ் அனைவரிடமும் தொற்றிக்கொண்டுள்ளது. இன்று அல்லது நாளைய எபிசோடுகளில் அதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )