அட இவ்ளோவா? முன்னணி சேனல்கள் களமிறக்கும் புதிய ஷோக்கள்!

தமிழ் சேனல்கள் தங்கள் டிஆர்பியை மீட்டெடுக்க புத்தம் புதிய சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

கொரோனாவால் பல சீரியல்கள் மற்றும் ஷோக்களின் ஷூட்டிங் நடைபெறாமல் டிஆர்பி ரொம்பவே அடிவாங்கியது. தற்போது தளர்வுகள் அறிவித்துள்ளதால் தமிழ் சேனல்கள் தங்கள் டிஆர்பியை மீட்டெடுக்க புத்தம் புதிய சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய் டிவி, சன்டிவி, கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்கள் புதிய தொடர்களை இந்த மாதம் களமிறக்கியுள்ளன.

மாஸ்டெர்செப் தமிழ்

சன்டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஷோதான் மாஸ்டெர் செஃப். இந்த நிகழ்ச்சி எத்தனையோ நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போட்டியாளர்கள் சமைப்பது, சமைத்த உணவை உலகின் முன்னணி செஃப்கள் சுவைத்து மதிப்பிடும் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன்டிவி விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டெர் செஃப்பை ஒளிபரப்ப இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5

விஜய் டிவியின் படு ஹிட்டான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் ஆரம்பமாக உள்ளது. கடைசியாக நடந்த 4 சீசன் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புதிய சீசனில் சினிமா பிரபலங்கள் அதிகம் பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பலவிதமான புதிய டாஸ்க்குகள் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்ஜெட்டுடன் சீசன் 5 தொடங்க உள்ளது.

தமிழும் சரஸ்வதியும்

ஜூலை 12ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் தமிழும் சரஸ்வதியும். தீபக் தின்கர் ஹீராவாக நடிக்க நக்ஷத்திரா ஹீரோயினாக நடித்துள்ளார். சுத்தமாக படிப்பு ஏறாத ஒரு பெண், தான் படிக்கவில்லை என்றாலும் தனக்கு மனைவியாக வரும் பெண் படித்து இருக்க வேண்டும் என நினைக்கும் ஹீரோ, இவர்களுக்கிடையேயான காதல் என கதை அமைக்கப்பட்டுள்ளதாக ப்ரோமோவை பார்க்கும்போது தெரிகிறது. இந்த தொடரில் தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் ரேகா கிருஷ்ணப்பா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து உள்ளனர்.

நம்ம வீட்டு பொண்ணு

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் நம்ம வீட்டு பொண்ணு. பிரவீன் பென்னட் இயக்கும் இந்த சீரியலில் வி.ஜே பப்பு ராஜா ராணி ஷாபானா, நடிகர் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த மாதமே தொடர் ஒளிரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபி டெய்லர்

கலர்ஸ் தமிழின் புதிய சீரியல் தொடர் அபி டெய்லர் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவன பின்னணியில் உள்ள ஹீரோவுக்கும், டெய்லர் அபிக்கும் இடையே நடக்கும் கதை என ப்ரோமோவை பார்க்கும் போது தெரிகிறது. இந்த தொடரில் ஹீரோவாக மதன் பாண்டியனும், ஹீரோயினாக ரேஷ்மா முரளிதரனும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜீ தமிழின் பூவே பூச்சூடவா தொடரில் நடித்தவர்கள்.

கன்னித்தீவு

பிரபல சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ரோபோ ஷங்கர் பங்குபெறும் ‘கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0’ எனும் கேம் ஷோ, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும் எனக்கூறப்படும் இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய தகவலை கலர்ஸ் தமிழ் சேனல் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

டான்ஸ் Vs டான்ஸ் சீசன்2

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 ரியாலிட்டி ஷோ விரைவில் துவங்கப்பட உள்ளது. முதல் சீசனில் பிரபல நடன இயக்குனர் பிருந்தா மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் நகுல் ஆகியோர் நடுவராக இருந்தார்கள். இந்த தொடரை கீர்த்தி மற்றும் விஜய் தொகுத்து வழங்கினர். இந்த நடன நிகழ்ச்சியின் முதல் சீசனில் அங்கிதா மற்றும் பூஜா வெற்றி பெற்றனர்.

சிங்கிள் பொண்ணுங்க

ஜூலை 11ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய ஷோ சிங்கிள் பொண்ணுங்க. இதில் தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியில் 8 பெண்கள் போட்டியிடுவார்கள். தாங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், அதை எதிர்கொண்ட விதம் பற்றி பேசுவார்கள். நடனம், பாடல், நடிப்பு மாதிரி தனித் திறமை இருந்தால் அதனையும் வெளிப்படுத்துவார்கள். 8 பேரில் யார் சிங்கிள் பெண் என்பதையும் அவர்களே தேர்வு செய்வார்கள்.

சர்வைவர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய ஷோ சர்வைவர். 15 முதல் 20 போட்டியாளர்கள் மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் தங்கி உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் போட்டியாளர்கள் அவர்களாகவே உருவாக்கி கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் சவால்கள் நிறைய உண்டு. சவால்களை எதிர்கொண்டு எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் ஒருவரே டைட்டில் வின்னர். இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங், ஆன்கர் தேர்வு விரைவில் துவங்கப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv vijaytv zeetamil colorstamil channels launch new serials shows

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com