Super Singer 6 Grand Finale: விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்ட ஒரே நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் போட்டியை இந்த தொலைக்காட்சி இரண்டு பிரிவாக நடத்தி வருகிறது. ஒன்று சூப்பர் சிங்கர் மற்றொன்று சூப்பர் சிங்கர் ஜூனியர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சூப்பர் சிங்கர் 6, அதாவது சீனியர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே நடத்தப்பட்ட சூப்பர் சிங்கர் போட்டிகளில் பங்கேற்றவர்களும், பாடும் திறனில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தவர்களும் பங்கெடுத்தனர்.
Super Singer 6 Grand Finale: சூப்பர் சிங்கர் 6 ல் வெற்றிப் பட்டத்தை தட்டிச் சென்ற செந்தில் கணேஷ்:
சூப்பர் சிங்கர் 6 போட்டியில் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இந்தச் சுற்றில் தேர்வாகியிருந்த அனிருத், சக்தி, ஸ்ரீகாந்த், ரக்சிதா, செந்தில் மற்றும் மாளவிகா நேற்று இரண்டு பாடல்கள் பாடினார்கள். மொத்தம் இரண்டு சுற்றுகள் நடந்ததில், ஒரு சுற்றுக்கு ஒரு பாடல் எனப் போட்டியாளர்கள் தலா 2 பாடல்கள் பாடினார்கள். இந்தப் போட்டியின் முடிவில் நேற்று சூப்பர் சிங்கர் 6 என்ற பட்டத்தை வென்றவர் மக்கள் இசைக் கலைஞன் செந்தில் கணேஷ்.
நாட்டுப்புறப் பாடலில் மக்கள் மனதைக் கவர்ந்த கிராமத்து ஜோடி கிளிகள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதி. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருவரும் இணைந்து பாடத் தொடங்கினார். பிறகு, இருவரையும் தனித் தனியாக பிரித்து இரண்டு குழுக்களில் சேர்த்தனர். என்னதான் தனித் தனியாக போட்டியிட்டாலும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக இவர்களின், “கோவக்கார மச்சானும் இல்லே”, “ஏ... சின்ன புள்ளே” ஆகிய பாடலுக்கு மவுசு அதிகம். செந்தில் பாடும்போது ராஜலட்சுமியும், ராஜலட்சுமி பாடும்போது செந்திலும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவர். இத்தகை ஜோடியில் இருந்து இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர் செந்தில் கணேஷ். இவர் இறுதிப் போட்டியில் நடந்த முதல் சுற்றில் ‘கருப்பசாமி’ என்ற பாடலை பாடி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர் இரண்டாவது சுற்றில் ‘தாண்டவக்கோனே’ என்ற பாடலை பாடிப் பலத்த கரக்கோஷங்கள் பெற்றார்.
போட்டியின் பட்டத்தை வெல்லும் நபரை பொதுமக்கள் வாக்குகள் வைத்து முடிவெடுத்தனர். இதில் செந்தில் முதல் இடம் பிடித்து வெற்றி வாகை சூடினார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக அளிக்கப்பட்டது. ஆனால் இதை விடப் பெரிய சொத்தாக ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பை வென்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து 2வது பரிசை ரக்சிதாவும், 3வது பரிசை மாளவிகாவும் வென்றார்கள்.
போட்டியின் முடிவில் புதிதாக காத்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி. போட்டியில் வெற்றியடைந்தால், ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடலாம் என்ற வாய்ப்பு மேலும் ஒரு நபருக்கு அளிக்கப்பட்டது. போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றிபெறவில்லை என்றாலும், இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் மனதைக் கவர்ந்து அவரின் இசையில் பாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீ காந்த்.
எத்தனை விதமான இசைகள் வந்தாலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கான மதிப்பு தமிழகத்தில் என்றும் தோய்ந்துவிடாது என்பதற்கு உதாரணம் செந்தில் கணேஷ் வெற்றி.