பாடகர்களான செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி ஜோடி இசைப் பணிக்களுக்காக புது ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி தம்பதியினர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அதுவரையில் திரை இசை மற்றும் கர்நாடக இசைப் பாடல் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக மக்களிசை பாடல்களை பாடி அசத்தியவர்கள் இந்த செந்தில்- ராஜலெட்சுமி ஜோடி.
இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும் பாடிய மக்களிசை பாடல்களுக்கு மக்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். இவர்களுக்கான வரவேற்பு எந்த அளவுக்கு இருந்ததென்றால், ராஜலெட்சுமி சில முறை எலிமினேஷனுக்கு வந்தபோதெல்லாம், அவருக்கு அதிகப்படியான வாக்குகளை அளித்து, எலிமினேஷனில் இருந்து அவரை ரசிகர்கள் காப்பாற்றினர்.
அந்த சீசனில் செந்தில் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு வீடு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் செந்தில் – ராஜலெட்சுமி தம்பதிக்கு வரிசையாக திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய சின்ன மச்சான் பாடல் சில மாற்றங்களோடு, இவர்கள் குரலிலே சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்று, மிகப்பெரிய ஹிட் ஆனது.
பின்னர் சீமராஜா, விஸ்வாசம், காப்பான், பட்டாஸ், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் செந்தில் கணேஷ் பாடி அசத்தினார். ராஜலெட்சுமியும் விஸ்வாசம், அசுரன் உள்ளிட்ட படங்களில் பாடினார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய வெளிநாட்டு கச்சேரிகளும் இவர்களுக்கு கிடைத்தது. பின்னர் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டனர். இந்த தம்பதிகள் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டனர்.
இவர்கள், எல்லா நிகழ்ச்சிகளிலும் பிற நாட்டுப்புற கலைஞர்களை அறிமுகப்படுத்தியும் ஊக்குப்படுத்தியும் வந்தனர். கொரோனா காலகட்டத்தில் நாட்டுபுற கலைஞர்களுக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்தார்கள் செந்தில் – ராஜலெட்சுமி தம்பதியினர். அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த செந்தில், தனது தாய் தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார் செந்தில். இந்த நிலையில், இசைப் பணிகளுக்காக புது ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளனர் இந்த இசை தம்பதியினர். அந்த ஸ்டூடியோவிற்கு NK ஸ்டூடியோ எனப் பெயரிட்டுள்ளனர். இந்த லாக்டவுனிலும் உற்சாகம் குறையாமல் அடுத்த முன்னெடுப்புகளை செய்து வரும் இந்த தம்பதிகள், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/237119104_381517023330660_5293593369661074090_n-1.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil