Superstar Rajini Humor Sense Tamil News : 'வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டுப் போகல' வசனம் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாருக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழ் திரையுலகில் இன்றுவரை ஸ்டைல் ஐகானாக வலம்வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. 1975 தொடங்கி 1999 வரை எண்ணிலடங்கா ஹிட், பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தவரின் பயணம், வயது மற்றும் உடல்நிலை காரணமாகப் படிப்படியாகக் குறைந்தது. என்றாலும் அவருடைய ஸ்டைலுக்கு மட்டுமல்ல, டைமிங்கில் நகைச்சுவை செய்யும் ஆற்றலும் ரஜினிக்கு உள்ளது.
2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன்' திரைப்படம் வெளிவந்தபோது ரஜினியின் வயது 60. அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஜினி, நகைச்சுவை உணர்வோடு பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்கே டஃப் கொடுக்கும் தன் தலைவரின் நகைச்சுவை பதிவு பத்தாண்டுகள் ஆகியும் புதிதாகவே உள்ளது என்று நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.
எந்திரன் திரைப்பட நாயகி ஐஸ்வர்யா ராய், அவருடைய மாமனார் மற்றும் ரஜினியின் நெருங்கிய நண்பரான அமிதாப் பச்சன், ஏ.ஆர்,ரகுமான், ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், "அமிதாப் பச்சன் சார்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன், வழிகாட்டி, ஆசான் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். 'அந்தாகானுன்', 'கிரஃப்தார்', 'ஹம்' உள்ளிட்ட திரைப்படங்களில் உங்களுடன் இணைந்து நடித்தபோது நீங்கள் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதை என்னால் மறக்கவே முடியாது' என்று ரஜினி பேசத்தொடங்கும் அந்த காணொளியில் எந்திரன் திரைப்படத்தில் தன்னோடு இணைந்து நடிக்கச் சம்மதித்ததற்கு ஐஸ்வர்யாவுக்கு நன்றி என்றுகூறி மேலும் பேசினார் ரஜினி.
"இதை நான் மிகைப்படுத்தவில்லை. உண்மையில் நடந்த சம்பம் ஒன்றைச் சொல்கிறேன்" என்று பேசத் தொடங்கினார். "பெங்களூரில் உள்ள என் சகோதரர் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருந்தேன். சகோதரர் வீட்டிற்கும் பக்கத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த 60 வயதுடைய நந்துலால் என்பவரும் வசித்து வந்தார். நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும், என்னைச் சந்திப்பதற்காக அவர் வீட்டிற்கு வந்தார். என்னைப் பார்த்ததும், 'என்ன ரஜினி உங்க முடிக்கு என்ன ஆச்சு?' என்றார். அதற்கு நான் 'அது விழுந்துடுச்சு. அதைப்பத்தி என்ன பேசிட்டு விடுங்க' என்றேன். உடனே, 'வேலையிலிருந்து ஓய்வு வாங்கியாச்சா? எப்படி இருக்கு வாழ்க்கை?' என்றார். 'இல்லை ஒரு படத்துல வேலை செஞ்சிட்டு இருக்கேன்' என்றதும் என்ன படம் என்று ஆர்வமாகக் கேட்டார். நானும் 'ரோபோ' என்று கூறி ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி என்றேன்.
மிகவும் மகிழ்ச்சியான அவர் நல்ல நடிகை என்று ஐஸ்வர்யாவைப் பாராட்டிவிட்டு உடனே 'யார் ஹீரோ' என்று கேட்டார்" என ரஜினி சொன்னதும் அரங்கே சிரிப்பலையில் மூழ்கியது. தொடர்ந்து, "அதற்கு 'நான்தான் ஹீரோ' என்றேன். அதிர்ச்சியான அவர் 'நீங்க ஹீரோவா?' என்று கேட்டார். அவருடன் வந்திருந்த சில குழந்தைகள், 'அவர் ஹீரோ ஹீரோ' என்று மெதுவாகக் கூறினார்கள். அதன்பிறகு சுமார் 10 நிமிடங்களுக்கு அவர் அங்கேயே இருந்தார். ஒரு வார்த்தையும் பேசாமல் என்னை மட்டுமே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு கிளம்பிவிட்டார். அவர் போனபின்பு, 'ஐஸ்வர்யா ராய்க்கு என்னதான் ஆச்சு? அபிஷேக் பச்சனுக்கு என்ன ஆச்சு. அதைவிடு அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு? இவரோடு ஹீரோயின் ஐஸ்வர்யாவா? என்று அவருடைய குரல் மட்டும் எனக்கு கேட்டது" என்றுகூறி முடிப்பதற்குள் சிரிப்பொலியிலும் கரஒலியிலும் அதிர்ந்தது அரங்கம்.
நேற்று, தன் 71-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரஜினி, இனி அரசியலிலும் ஈடுபடுவார் என்று ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ரஜினியை 'நடிகர் ரஜினியாக' மட்டுமே பார்த்து அவருடைய முதல் காட்சி என்ட்ரிக்காக இன்றும் சிலாகித்துக் காத்துக்கொண்டிருப்பவர்கள் பலர். இந்நிலையில் ரஜினியின் இந்த ஆஃப்ஸ்க்ரீன் காமெடி க்ளிப் தற்போதைய கொண்டாட்டங்களில் முதன்மையாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"