/indian-express-tamil/media/media_files/2025/08/28/download-2025-08-28-13-25-24.jpg)
நடிகர் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க கடந்த 1995ம் ஆண்டில் வெளியான சூப்பர்ஹிட் படம் பாட்ஷா. இந்தப் படத்தில் பாட்ஷா மற்றும் மாணிக்கம் என இருவேறு கெட்டப்புகளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். தேவா இசையில் பாடல்கள், பிஜிஎம் என பட்டையை கிளப்பியது இந்தப் படம். ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.
நடிகர் ரஜினிகாந்தின் அனைத்து படங்களும் ரசிகர்களை கவர்ந்தவையே. சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் வினியோகஸ்தர்களை அதிகமாக பாதிக்காத படங்களாகவே அவை அமைந்தன. ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களாக பல படங்கள் அமைந்துள்ளன. அவற்றில் எல்லாம் முன்னிலையில் உள்ள படம் என்றால் அது பாட்ஷாதான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இந்தப் படத்தில் ரஜினியுடன் நக்மா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
மேலும் படத்தில் ரகுவரன், சரண்ராஜ், ஜனகராஜ் உள்ளிட்ட நடிகர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சூழ்நிலை காரணமாக கேங்ஸ்டராக மாறும் நபர், அதே சூழ்நிலை காரணமாக தன்னுடைய குடும்பத்திற்காக மாணிக்கமாக மாறி, தன்னை மறைத்துக் கொண்டு ஆட்டோ ஓட்டுநராக மாறுவதை இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது. சத்யா மூவிஸ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் பிரபல இசையமைப்பாளர் தேவா.
இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. தொட்ந்து 15 மாதங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் அதுவரை வெளியான படங்களின் வசூலை முறியடித்தது. இந்தப் படம் தற்போது ரஜினியின் ரசிகர்களுக்கு பேவரிட்டாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு பிரபல பாடலாசியரியர் பாலகுமாரன் வசனங்களை எழுதியிருந்தார். அவரது எழுத்தில் எனக்கு இன்னொரு பேரு இருக்கு, நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி போன்ற வசனங்கள் படத்தின் பலத்தை கூட்டின.
இதேபோல படத்தில் ரகுவரனின் ஆண்டனி கேரக்டரும் சிறப்பான விமர்சனங்களை பெற்றன. படத்தில் தேவா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களின் பேவரிட்தான். நான் ஆட்டோகாரன் பாடல் தற்போது ஆயுதபூஜையின் போது ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஒலிப்பதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார் தேவா. தங்கமகன் இன்று சிங்க நடைபோட்டு பாடலில் நிஜமாகவே சிங்கநடை போட்டிருந்தார் ரஜினி.
இதனிடையே, அவர் ஒரு மேடை பேச்சின்போது தேவாவை புகழ்ந்து தள்ளினார். தேவா, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு முன்னதாகவே படத்தை பார்த்த நிலையில், படம்மீது முதலில் நம்பிக்கை இல்லாத தான், தேவாவிடம் போன் போட்டு படம் குறித்து கேட்டதாகவும், அண்ணாமலை போல படம் உள்ளதா என்று தான் கேட்க, தேவாவோ, இந்தப் படம் 10 அண்ணாமலைக்கு ஒப்பானது என்று பாராட்டியதாகவும் ரஜினி தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, தான் படத்தை பார்த்தபோது தான் படத்தின் மியூசிக்கை தேவா எப்படி ஏற்றியிருந்தார் என்பதையும் பிஜிஎம்மை அவர் சிறப்பாக்கியிருந்ததையும் தான் பார்த்ததாகவும் ரஜினி தெரிவித்திருந்தார். படத்தின் வெற்றியில் தனக்கும் சுரேஷ் கிருஷ்ணாவிற்கும் 50 சதவிகிதம் பங்கிருந்ததாகவும் ஆனாலும், படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது இசையமைப்பாளர் தேவா தான் என்றும் ரஜினி பாராட்டியிருந்தார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.