/indian-express-tamil/media/media_files/2025/08/03/rajinikanth-col-2025-08-03-22-54-53.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு அனுபவங்கள், சக நடிகர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை, இயக்குனருடனான முதல் சந்திப்பு என பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், "படப்பிடிப்பில் நாகார்ஜுனாவைப் பார்த்தேன். அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார். அவரது முடி அப்படியே அடர்த்தியாக இருக்கிறது. ஆனால், என் முடி எல்லாம் போய்விட்டது. இது குறித்து ரகசியத்தை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், உடற்பயிற்சிதான் காரணம் என்று சொன்னார்" என்று கூறி ரஜினி அரங்கத்தையே அதிர வைத்தார்.
'கைதி' படம் பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜை ரஜினிகாந்த் போனில் தொடர்புகொண்டாராம். லோகேஷ் ஒரு சிறந்த இயக்குநராக வருவார் என அன்றே ரஜினி கணித்துள்ளார். "மற்ற நடிகர்கள் இவரைத் தேடி செல்வதற்கு முன், நான் அவரிடம் கதை கேட்க வேண்டும் என விரும்பினேன். எனவே, 'கைதி' படம் பார்த்த பிறகு அவரை அழைத்து, என்னிடம் ஏதேனும் கதை இருக்கிறதா?" என்று கேட்டேன்.
அதற்கு லோகேஷ், "கதை இருக்கிறது" என்று சொல்லிவிட்டு, "நான் கமல்ஹாசன் ரசிகன்" என சொன்னாராம். "யார் ரசிகன் என்று நான் உன்னிடம் கேட்டேனா? அப்புறம் ஏன் அதைச் சொன்னாய்?" என்று ரஜினி வேடிக்கையாகக் கேட்டார். "இதை அவர் ஏன் சொன்னார் என்றால், நான் ஒரு பஞ்ச் வசனம் இல்லாத, மிகவும் புத்திசாலித்தனமான ஒரு கதையைச் சொல்லப்போகிறேன் என்று மறைமுகமாகச் சொல்கிறார்" என்றும் ரஜினி விளக்கமளித்தார்.
தொடர்ந்து கூலி படத்தின் நடன இயக்குனர் சாண்டியைப் பற்றிப் பேசிய ரஜினி, "சாண்டி, முதல் பாடலிலேயே கலக்கி விடுவோம் என்று சொன்னார். நான் அவரிடம், 'நான் ஒரு 1950s மாடல். பல லட்சம் கிலோமீட்டர்கள் ஓடிவிட்டேன். என் உடல் பாகங்கள் எல்லாம் தேய்ந்து போயின. அதனால், எனக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது, என்னை மெதுவாக கையாளுங்கள்'" என்று நகைச்சுவையுடன் கூறினார். இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
'கூலி' படத் தலைப்பு ரஜினிகாந்தின் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புடையது. அவர் தனது ஆரம்ப நாட்களில் கூலி வேலை செய்திருக்கிறார். அந்த அனுபவத்தைப் பற்றிப் பேசிய ரஜினி, "கூலி வேலை செய்தபோது பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். ஒருநாள், ஒருவன் என்னிடம் 2 ரூபாய் கொடுத்து, தன் பெட்டியை ஒரு டெம்போவில் ஏற்ற சொன்னார். அவரது குரல் எனக்கு பழக்கப்பட்டதாக இருந்தது. நான் கல்லூரியில் மிகவும் கிண்டல் செய்த எனது நண்பன் அவர் என்று உணர்ந்தேன்.
'என்னடா இது, என்ன ஒரு வாழ்க்கைடா உனக்கு' என்று அவன் சொன்னபோது, அதுதான் என் வாழ்க்கையில் முதன்முதலாக அழுது, உடைந்த தருணம்" என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கள், ஒரு சூப்பர்ஸ்டார் என்பதை கடந்து, ஒரு எளிய மனிதனின் அனுபவங்களையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இதுவே 'கூலி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.