/indian-express-tamil/media/media_files/2025/06/09/vhOkrbjjnPZ5CT2Zebv2.jpg)
'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகும் திரையரங்களுக்கு பாதுகாப்பு கோரி கர்நாடக திரையரங்குகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைஃப்'. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தக் லைஃப்' படம் கடந்த 5 ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே, 'தக் லைஃப்' படம் புரோமோஷன் விழாவில், 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' எனக் கமல் குறிப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்த நிலையில், 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதித்து இருப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
இந்நிலையில், 'தக் லைஃப்' திரைப்படம் எந்த வித இடையூறும் இன்றி வெளியாக கோரி நடிகர் கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால், கர்நாடகாவில் 'தக் லைஃப்' படம் வெளியாக்குவதில் சிக்கல் நிலவி வருகிறது.
இந்நிலையில், 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகும் திரையரங்களுக்கு பாதுகாப்பு கோரி கர்நாடக திரையரங்குகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஓரிரு சமூக விரோத சக்திகள் 'தக் லைஃப்' படத்தை திரையிட விரும்பும் கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளை அச்சுறுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து திரையரங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.கே. மிஸ்ரா, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார். மேலும், "இங்கே ஏன் பிரிவு 32 மனுவை தாக்கல் செய்ய வேண்டும்?, தியேட்டர்களில் தீயணைப்பு கருவிகளை பொருத்துங்கள்' என்றும் தெரிவித்தார். அத்துடன் மனுதாரர் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, ​​மிரட்டல் விடுத்தவர்களுடன் சமரசம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.