'கோச்சடையான்' திரைப்படம் தொடர்பான வழக்கில் லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை கீழமை நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் `கோச்சடையான்'. மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடமிருந்து மீடியா ஓன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ. 6.2 கோடி கடன் பெற்றிருந்தது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டிருந்தார். ஆனால், அதிக செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களை பெரிதும் ஈர்க்காததால் பெரியளவில் வசூலை ஈட்டவில்லை.
இந்த நிலையில், கடனாகப் பெற்ற பணத்தை மீடியா ஓன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பித் தரவில்லை எனக் கூறி, ஆட்-பியூரோ, பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முரளி, லதா ஆகியோர் மீது `மோசடி செய்து ஏமாற்ற முயற்சி', `ஆதாரங்களைத் திரித்தல்', `தவறான அறிக்கை சமர்ப்பித்தல்' ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை' எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களைத் தாக்கல் செய்த பிரிவுகளின் கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்தது.
அதேநேரம், கர்நாடக உயர் நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு நீதிமன்ற விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், குற்றவியல் மேல்முறையீட்டில் 2018 ஜூலை 10 ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவைக் கருத்தில் கொண்டு, மனுதாரர்கள் விடுவிக்கக் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்வது அல்லது விசாரணையை எதிர்கொள்வதுதான் ஒரே வழி என்று நீதிமன்றம் கருதியது. .
பின்னர், ”லதா ரஜினிகாந்த் வழக்கை மீட்டெடுக்கிறோம் (மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறோம்). SLP(Crl) எண். 9818/2022 மற்றும் SLP(Crl.) எண். 8327/2022 ஆகியவை தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை மீட்டெடுப்பதன் மூலம் அகற்றப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்துக்கு விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம். மேலும் இரு தரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, மனுதாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராக தேவைப்பட்டால், ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் நிலை குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது" என உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“