இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா ’என்.ஜி.கே’ படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்திருக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் 37-வது படமாக உருவாகியிருக்கும் இதனை இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கிறார். ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு, சூர்யாவும் கே.வி.ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது.
பிரதமராக நடிக்கும் மோகன் லால், அவருக்குக் கீழே பணியாற்றும் சிறப்பு அதிகாரி சூர்யா என இந்த அட்டகாச காம்போவை திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இவர்களுடன் பொம்மன் இரானி, சாயிஷா, ஆர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நேற்று இதன் ஆடியோ லாஞ்ச் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
இதில் பேசிய நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், “கே.வி.ஆனந்த் இயக்குநர்- ஒளிப்பதிவாளர், அவர் நான்கு ஆண்டுகளாக புகைப்பட கலைஞராக பணியாற்றிய பன்முக தன்மை கொண்ட திறமையாளர். தனது முதல் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். ரஜினி நடித்த ’சிவாஜி’க்கு கேமராமேனாகவும் பணியாற்றினார். ’மாற்றான்’ திரைப்படம் வெற்றிப் பெற்றிருக்க வேண்டிய படம், ஆனால் அது நடக்கவில்லை. கே.வி.ஆனந்த் 10 வயதாக இருந்தபோது, ஒரு ஓவியப் போட்டியில் பங்கேற்று என்னிடமிருந்து பரிசு பெற்றார். அவர் மூன்றாம் பரிசை வென்றதும் எனக்கு நினைவிருக்கிறது” என்றார்.
Kaappaan Audio Launch Event
”திரைத்துறையில் வேலை செய்வதற்கு சம்பளம் வாங்குகிறோம் என்பதோடு இருக்காமல், தனக்கு சமூக அக்கறை உண்டு என செயல்பட்ட சூர்யாவுக்கு வாழ்த்துகள்” என்றார் கவிஞர் வைரமுத்து.
அவரைத் தொடர்ந்து அவரின் இளைய மகன் கபிலன் வைரமுத்து பேசினார். அப்போது, “சூர்யா பேசியதை ரஜினி காந்த் பேசியிருந்தால், மோடிக்குக் கேட்டிருக்கும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேடையில் பேசிய ரஜினி, “தம்பி சூர்யாவின் அன்பான ரசிகர்களே எனத் தனது உரையைத் தொடங்கினார். இந்தியாவின் இயல்பான நடிகர் மோகன்லால் என்றும் குறிப்பிட்டார். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் வெளிப்பட்டதாக பாராட்டியதோடு, அவரின் கருத்தை தாம் ஆமோதிப்பதாகவும் குறிப்பிட்டார். நான் பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என சொன்னார்கள், ஆனால் சூர்யா பேசியதும் மோடிக்கு கேட்டுள்ளது, மாணவர்கள் படும் கஷ்டங்களை கண்ணெதிரே பார்த்து, அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர் சூர்யா” என்றார். அதோடு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தான் ஒரு படம் நடிக்க இருந்ததாகவும், ஆனால் சில பல காரணங்களால் அந்தப் படத்தை தொடங்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
’காப்பான்’ ஆடியோ லாஞ்சில் பேசிய இயக்குநர் ஷங்கர், ”சூர்யாவின் தந்தை சிவகுமார் இன்னும் இளமையாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் சூர்யா ஆண்டுதோறும் இருப்பதை விட இளமையாகி வருகிறார். காப்பன் அவருக்கு ஒரு சிறந்த மாஸ் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்