ஆடியோ லான்ச் அரசியல்! பட புரமோஷனுக்காக பேசுகிறார்களா ஹீரோக்கள்?

2015 ஆம் ஆண்டு சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது இளையராஜா, படகில் சென்று மக்களுக்கு உதவி செய்தார். அப்போது அரசியல் பேசும் நடிகர்கள் யாரும் உதவ முன்வரவில்லை

எ.பாலாஜி

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களின் இசை வெளியிட்டு விழாவின் போது அந்த படத்தின் நடிகர்கள் அரசியல் கருத்துகளைக் கூறி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2013 ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் அரசியல் ரீதியாக சந்தித்த பிரச்னைகளுக்கு பிறகு நடிகர் விஜய் தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது என்பது வாடிக்கையாகி வருகிறது.

தலைவா படத்தை தொடர்ந்து வெளியான, மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “அவ்வளவு ஈஸியா இந்த உலத்துல நம்மள வாழ விட்றமாட்டாங்க” என்று பேசினார். அந்த படத்தில் கூறப்பட்ட அரசியல் கருத்துகள் ஆளும்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையானது.

அதே போல இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட விஜயின் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ”உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்கை ஜம்முனு இருக்கும்” என்று பஞ்ச் பேசியது அரசியல் மொழியில்தான் பேசினார். அந்த நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஜாலியாக பேசிய விஜய் “மெர்சலுக்கும் சர்காருக்கும் என்ன வித்தியாசமென்றால், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்காரில், அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கிறார் முருகதாஸ் சார்” என்று கூறினார். சர்க்கார் படமும் அரசியல் ரீதியாக விமர்சனைத்தை பெற்றது. இவ்வாறு நடிகர் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது என்பது தொடர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது தொடர்ந்து வருகிறது.

1995 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதே கால கட்டத்தில் வெளியான ரஜினியின் பாட்ஷா படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது. அந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் ரஜினி, ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு’ என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் அன்றைய அதிமுக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையிலேயே பேசினார். அப்போதே அவர் அரசியல் களத்துக்குள் வந்துவிட்டார். இதையடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரஜினி, திமுக – தமாகா கூட்டணிக்கு தனது ஆதரவு தெரிவித்தார். அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு பிறகு, ரஜினி பங்கேற்கும் எல்லா கூட்டங்களிலும் அவருடைய பேச்சிலிருந்து அரசியல் கருத்துகளையும் அவரின் அரசியல் வருகையையும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தவுடன் அவருடைய எல்லா பேச்சுகளும் அரசியலாகின்றன. குறிப்பாக, காலா பட இசை வெளியீட்டு விழாவில், சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் தனது படங்களின் வெற்றி தோல்விகளை பற்றி பேசினார். அதில், ‘இந்த குதிரை 40 ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கிறது’ என்று தனது வெற்றி பயணத்தை கூறினார். மேலும், முந்தைய வெற்றி விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டதையும், நதிநீர் இணைப்பில் உள்ள ஆர்வத்தையும் பேசினார்.

இதையடுத்து வெளியான சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, கஜா புயல் பற்றி மட்டுமே பேசினார்.

அந்த வரிசையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவதில் நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் அகரம் அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, “மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கடுமையான எதிர் விமர்சனம் வைத்தனர். அதே நேரத்தில் அரசியல் களத்தில் அவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. இந்நிலையில்தான் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது கருத்தில் இருந்து பின்வாங்காமல் புதிய கல்விக்கொள்கை குறித்தும் நீட் தேர்வு குறித்தும் பேசி மீண்டும் அரசியலில் உஷ்ணத்தை கிளப்பியிருக்கிறார்.

இப்படி நடிகர்கள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது என்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவதோடு அவர்களுடைய படத்துக்கு வணிக ரீதியான ஒரு விளம்பரத்தையும் செய்வதாக கருதப்படுகிறது.

இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஐ.இ தமிழுக்கு பேசுகையில், “இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் அரசியல் பேசுவது அவர்களின் படம் ஓட வேண்டும் என்பதற்காக பரபரப்பை ஏற்படுத்தவே பேசுகிறார்கள். 2015 ஆம் ஆண்டு சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது இளையராஜா, படகில் சென்று மக்களுக்கு உதவி செய்தார். அப்போது அரசியல் பேசும் நடிகர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. அதே போல, ஒரு மாணவி கல்விக்கட்டணம் கட்ட முடியவில்லை என்று செய்தி வந்தபோது, இவர்கள் எத்தனை பேர் உதவி செய்தார்கள். அதையெல்லாம்விட, இவர்களுடைய படங்கள் வெளியாகும்போது மற்ற எந்த படங்களுக்கும் தியேட்டர் கிடைக்கவிடாமல் அனைத்து தியேட்டர்களிலும் இவர்களுடைய படத்தையே ஓட்டுகின்றனர். ஆபரேஷன் தியேட்டரில்கூட இவர்கள் படம்தான் ஓட வேண்டும் என்கிறார்கள். தியேட்டர்களை மாஃபியா கும்பல்கள் போல ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு நான் சார்ந்த அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது என்னுடைய படத்தை வெளியிடுவதற்கே தியேட்டர் கிடைக்கவில்லை. இப்படியான, விஷயங்கள் இருக்கும்போது, இதையெல்லாம், இவர்கள் சமூக அக்கறையில் பேசவில்லை படம் ஓட வேண்டும் என்பதற்காக பரபரப்புக்காக பேசுகிறார்கள். பொதுவாக ஒரு படத்தைப் பற்றி வாய்மொழி வழியாக கருத்து பரப்பப்பட்டு தியேட்டருக்கு மக்கள் வந்த காலம் போய்விட்டது. அதனால், தியேட்டர்களுக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள் இப்படி பேசுகின்றனர்” என்று கடுமையாக சாடினார்.

நடிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது குறித்து, திமுக எம்.எல்.ஏ-வும் நடிகருமான வாகை சந்திரசேகர் நம்மிடம் கூறுகையில், “நடிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் விளம்பரத்துக்காகவோ அல்லது சமூக அக்கறையிலோ எந்த நோக்கத்துக்காகவோ என எப்படி பேசினாலும் அந்த கருத்து வரவேற்கப்பட வேண்டியதுதான். பொதுவாக எங்களைப் போல அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு கருத்துகளை தெரிவிப்பதற்கு அரசியல் மேடைகள் இருக்கின்றன. ஆனால், நடிகர்களுக்கு அப்படியான மேடை இல்லை. அவர்களுக்கு இதுதான் மேடை. அதனால், அவர்கள் அந்த இடத்தில்தான் பேச முடியும். உண்மையில் படம் நன்றாக இருந்தால் ஓடும். அப்படி இல்லாவிட்டால் என்னதான் படத்துக்கு விளம்பரம் செய்தாலும் படம் நன்றாக இல்லையென்றால் ஓடாது. அது எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து எவ்வளவு பெரிய விளம்பரம் செய்தாலும் படம் நன்றாக இருந்தால் ஓடும் நன்றாக இல்லாவிட்டால் ஓடாது. அதனால், ஆடியோ வெளியிட்டுவிழாவில் பரபரப்பாக பேசித்தான் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டு படம் ஓடும் என்ற கூற முடியாது. அதனால், நடிகர்கள் தெரிவிக்கும் அரசியல் கருத்துகளை வரவேற்கிறேன்” என்று கூறினார்.

பிரபலங்களாக இருக்கும் நடிகர்கள் அரசியல் கருத்துகளை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவது படத்தின் விளம்பரத்துக்காக என்ற விமர்சனமும் அப்படியே இருந்தாலும் அதை வரவேற்கலாம் என்றும் இரண்டு வகையான கருத்துகள் உள்ளன. எப்படி இருந்தாலும் நடிகர்களின் கருத்துகள் மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் நல்லவிதமான தாக்கத்தை உருவாக்கினால் அவை வரவேற்கப்படவேண்டியவையே.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suriya political speech in kaappaan audio launch

Next Story
‘டாஸ்க்னா அப்படி தான் பேசுவேன்’ – எகிறிய சேரன்… ‘சும்மா கத்தாம போங்க’ – விடாமல் மல்லுக்கட்டிய மீரா!bigg boss today promo vijay tv losliya kavin cheran - இரு கிராமமாக பிரியும் பிக்பாஸ் போட்டியாளர்கள்... அக்கிரமம் நடக்காமல் இருந்தால் சரி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com