கேரளாவில் விஜய்யை துரத்தும் சூர்யா!

சி3 படத்தின் கதைக்களம் ஆந்திராவாக அமைந்தது எப்படி எதேச்சையானது இல்லையோ அதேபோல் இப்போது சூர்யாவின் படத்தில் மோகன்லால் நடிப்பதும்.

பாபு

விஜய், அஜித் படங்கள் அளவுக்கு சூர்யாவின் படங்கள் தமிழகத்தில் வசூலிப்பதில்லை. எனினும் அவர்கள் இருவர் அளவுக்கு சூர்யாவும் சம்பளம் பெறுகிறார். இது எப்படி சாத்தியம்?

தனது உறவினர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படங்களில் மட்டுமே சூர்யா நடிக்கிறார். கிட்டத்தட்ட சொந்த தயாரிப்பு போல. அதனால் தயாரிப்பாளரின் லாபத்தில் ஒரு பகுதியும் சூர்யாவுக்கு சம்பளமாக வருகிறது. இன்னொரு முக்கிய காரணம், தமிழகத்துக்கு வெளியே ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களிலிருந்து வரும் வருவாய்.

surya poster

கேரளாவில் சூர்யா ரசிகர்கள்…

தெலுங்கை பொறுத்தவரை அஜித், விஜய்யைவிட சூர்யாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முக்கியமாக சிங்கம் படத்துக்குப் பிறகு. சிங்கத்தின் மூன்றாவது பாகமான சி3 இன் தெலுங்குப் பதிப்பு 18 கோடிகளுக்கு வாங்கப்பட்டது. தானா சேர்ந்த கூட்டத்தின் தெலுங்கு திரையரங்கு உரிமைக்கு பதில் அனுஷ்காவின் பாகமதி தமிழக திரையரங்கு உரிமையை பெற்றார் ஞானவேல்ராஜா. எப்படிப் பார்த்தாலும் இந்த பண்டமாற்றின் மதிப்பு 15 கோடிகளுக்கு குறையாது.

கேரளாவைப் பொறுத்தவரை விஜய்யே டாப்பில் இருக்கிறார். ரஜினி படங்கள் அதிக தொகைக்கு கேரளாவில் வாங்கப்பட்டாலும் விஜய்க்கே அங்கு ரசிகர்கள் அதிகம். அடுத்த இடத்தில் சூர்யா. அவரது 24 படத்தின் கேரள உரிமை 3.10 கோடிகளுக்கு வாங்கப்பட்டது. அந்தப் படம் சரியாகப் போகாததால் அதிகம் விற்கும் என எதிர்பார்க்கப்பட்ட சி3, 3.7 கோடிகளுக்கே விற்கப்பட்டது (சிலர் 5.30 கோடிகள் என்கிறார்கள்). அதேநேரம் விஜய்யின் தெறி 5.60 கோடிகளுக்கு வாங்கப்பட்டது. சூர்யா சில கோடிகள் விஜய்யைவிட பின்தங்கியே உள்ளார்.

இந்த இடைவெளியை குறைக்க, இல்லாமல் செய்ய விரும்புகிறார் சூர்யா. அவரது கடைசிப் படம் தானா சேர்ந்த கூட்டத்தை தமிழகத்தைவிட கேரளாவில்தான் அதிகம் விளம்பரப்படுத்தினார். தொடர்ச்சியாக கேரளா சென்று ரசிகர்களை சந்திக்கிறார். சில தினங்கள் முன்பு மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் நலநிதிக்காக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு 10 லட்சம் நன்கொடை வழங்கினார். இந்த செயல்பாடுகளை இப்போது மேலுமொரு புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மோகன்லாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

vijay poster

கேரளாவில் ஒட்டப்பட்டுள்ள விஜய் போஸ்டர்

விஜய்யின் ஜில்லாவில் மோகன்லால் இடம் பெற்றது எதேச்சையாக நடந்த விபத்தல்ல. விஜய்க்கு கேரளாவில் இருக்கும் மார்க்கெட்டை கணித்தே மோகன்லாலை நடிக்க வைத்தனர். மோகன்லாலுடன் இணைந்து நடிக்கையில் விஜய்யின் கேரள ரீச் இன்னும் அதிகமாகும். மோகன்லால் ஜில்லாவில் நடித்ததும் இதேபோன்ற கணக்கை மனதில் வைத்தே. விஜய்யுடன் சேர்ந்து நடித்தால் அப்படத்தின் கேரள வசூல் எகிறும், சம்பளமாக கேரள விநியோக உரிமையை வாங்கினால் இரண்டு படத்தின் சம்பளத்தை ஒரே படத்தில் பெறலாம்.

இப்போது சூர்யாவின் முறை. சி3 படத்தின் கதைக்களம் ஆந்திராவாக அமைந்தது எப்படி எதேச்சையானது இல்லையோ அதேபோல் இப்போது சூர்யாவின் படத்தில் மோகன்லால் நடிப்பதும். மோகன்லாலுடன் இணைந்து நடிக்கையில் அப்படத்தின் கேரள விநியோக உரிமை அதிக தொகைக்கு செல்லும். கேரளாவின் கடைகோடி ரசிகனின் மனதிலும் இடம் பிடிக்கலாம்.

விஜய், சூர்யாவுடன் இணைந்து மோகன்லால் தமிழ்ப் படங்களில் நடிப்பது போல் ஏன்? விஜய், சூர்யா மோகன்லால் போன்றவர்களுடன் இணைந்தோ தனித்தோ மலையாளப் படங்களில் நடிப்பதில்லை?

சிம்பிள். மோகன்லால் தமிழ்ப் படங்களில் நடிக்கையில் மலையாளப் படங்களைவிட அதிக சம்பளம் கிடைக்கிறது. அதுவே தமிழில் 25 – 30 கோடிகள் வாங்கும் விஜய், சூர்யா மலையாளத்திற்குப் போனால் இதில் பாதிகூட கிடைப்பது கடினம். அங்கு சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலே 5 கோடிக்கும் குறைவாகவே வாங்குகிறார்கள்.

“மலையாள சினிமா பிரமாதமாக இருக்கிறது, அதில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன், நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று நம்மவர்கள் கூறினாலும் கடைசிவரை மலையாளத்தில் நடிக்க மாட்டார்கள். அவர்களின் ஆர்வம் கேரளாவில் தமது படங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்குவதே தவிர மலையாளத்தில் நடிப்பதில்லை. இந்த ரேஸில் மோகன்லாலை இணைத்துக் கொண்டதன் மூலம் விஜய்யை தொட்டுவிடும் தூரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் சூர்யா.

×Close
×Close