தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்க இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்து எஸ்.வி. சேகர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக, தயாரிப்பாளர் சங்க பணத்தை அதன் தலைவர் விஷால் முறைகேடாக செலவழித்துள்ளதாக, தயாரிப்பாளர்கள் எஸ்.வி.சேகர், கே.ராஜன், அழகப்பன் உள்ளிட்டோர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்து எஸ்.வி. சேகர் கேள்வி
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்க பணம் சுமார் 7 கோடி ரூபாயை விஷால் தன்னிச்சையாக செலவு செய்ததாக தாங்கள் கூறி வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால் சுமார் எட்டு கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக விஷால் தங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக எஸ்.வி.சேகர் கூறினார். மேலும் இளையராஜாவுக்காக நடத்தும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு 3.50 கோடி பணம் கொடுப்பது ஏன் என்றும் கேள்விய்ந்ழுப்பியிருக்கிறார். இதன் மூலம் கையாடல் செய்ததை விஷாலே ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பின்னர் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
தயாரிப்பாளர் சங்க பணத்தை தனது சொந்தப் பணம் போல் எடுத்து விஷால் செலவு செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பான புகாரின் பேரில் தமிழக அரசு அதிகாரிகள் விரைவில் விஷாலை விசாரிக்க உள்ளதாகவும் கூறினர்.