லைக்கா நிறுவனம் தான் 'தமிழ் ராக்கர்ஸ்'; விஷாலுடன் ரகசிய டீலிங்! டி.ஆர், ராதாரவி சரமாரி கேள்வி

மூத்தவர்கள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், யார் யாரோ வந்து ஆள்கிறார்கள்

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வலியுறுத்தி பாரதிராஜா, டி.ராஜேந்தர், ராதாரவி உள்ளிட்டோர் சென்னையில் இன்று கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

முதலில் பேசிய ஜே.கே.ரித்தீஷ், “தயாரிப்பாளர் சங்கத்தை விட்டு விஷால் தானாக சென்றால் அவனுக்கு நல்லது. இல்லாவிட்டால் ஒன்று சேர்ந்து விரட்டினால் நன்றாக இருக்காது” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “புலன் விசாரணை நடத்தும் இணையதளம் ஒன்று, தமிழ் ராக்கர்ஸுடன் விஷால் ரகசிய ஒப்பந்தம் வைத்திருப்பதாக ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதற்கு இப்போது வரை விஷால், எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆகையால், அந்த கட்டுரையில் உள்ளது உண்மையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஒன்று, விஷால் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையெனில், தவறான செய்தி வெளியிட்டதாக, அந்த இணையதளம் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் ராக்கர்ஸ் யாருடைய நிறுவனம் என்பதும் விஷாலுக்கு தெரியும். அதை அவர் கண்டுபிடித்தும் விட்டார். ஆனால், அது யார் என்பதை மட்டும் விஷால் சொல்ல மறுக்கிறார். சம்பந்தமேயில்லாமல், விஷாலுக்கு ஏன் லைக்கா நிறுவனம் 22 கோடி கடன் கொடுத்து உதவ வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து பேசிய மற்றொரு தயாரிப்பாளர், “சுரேஷ் காமாட்சி, தமிழ் ராக்கர்ஸ் யாருடையது என்று வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார். அது லைக்கா நிறுவனம் தான். லைக்கா நிறுவனமே, தமிழ் ராக்கர்ஸ்-ஐ நடத்தி வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய ராதாரவி, ‘விஷால் தான் அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. தமிழ் ராக்கர்ஸுடன் ‘டீல்’ பேசியதாக வெளியான தகவல் பற்றி இதுவரை விஷால் வாய்திறக்காதது ஏன்?. தனது இரும்புத்திரை படத்தை வெளியிடும் முயற்சியிலேயே விஷால் இருக்கிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன்பின் பேசிய டி.ராஜேந்தர், “எனக்கு சினிமாவில் குருநாதர் பாரதிராஜா அவர்கள் தான். அவர் கூப்பிட்டதால் இந்த நிகழ்வுக்கு வந்தேன். எனக்கு சோறு போட்டு வாழ வைத்தது இந்த சினிமா. அதற்கு ஒரு கஷ்டம் என்பதால் வந்து நிற்கிறேன். வாக்குறுதியை மீறி அதிக திரையரங்கில் ‘இரும்புத்திரை’ படத்தை வெளியிட அனுமதி அளித்தது ஏன்?. தனது படத்தை 300ம் மேலான தியேட்டரில் ரிலீஸ் செய்தது ஏன்?. பொதுக்குழுவையே ஒழுங்காக நடத்த முடியாத விஷால், யாரைக் கேட்டு ஸ்டிரைக்கை அறிவித்தார்? அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? ரூ.7 கோடி வைப்பு நிதி எங்கே போனது? அதற்கு இன்றுவரை பதிலை காணோமே! விஷால் பதில் சொல்ல முடியுமா?

பாரதிராஜா, ராதாரவி போன்ற மூத்தவர்கள் பலரும் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால் தான், யார் யாரோ வந்து ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது ஒற்றுமையுடன் இருப்போம்” என்றார்.

பின்னர் பேசிய பாரதிராஜா, “ஈழத் தமிழர்கள் குறித்து படம் பண்ண முடியுமா? என லைக்கா நிறுவனம் என்னை அணுகியது. அதற்கு நான், ‘பார்ப்போம்.. கொஞ்சம் பொறுங்கள்’ என சொல்லி வைத்திருக்கிறேன். ஆகவே, என்னைப் பொறுத்தவரை லைக்கா நிறுவனம் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறையோடு இருப்பதாகவே பார்க்கிறேன். அது யாருடைய நிறுவனமாக இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் நான் யோசிப்பதில்லை. சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்பது சரிதான். ஆனால், சில சமயம் தேவைப்படும் பொழுது, அந்த சட்டத்தை எதிர்த்து நிற்க வேண்டியதிருக்கு. இனி தமிழகத்தில் அனைத்து துறையிலும் தமிழர்களே ஆட்சி செய்வார்கள்” என்றார்,

×Close
×Close