முதன் முதலாக பிகினி ஆடையில் நடித்திருக்கும் டாப்சி பன்னு, தன்னுடன் நடித்திருக்கும் ஜாக்லின் ஃபெர்னாண்டஸின் கட்டுடல் குறித்து பெரிதும் கவலை கொண்டுள்ளாராம்.
கடந்த 1997-ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் இயக்குனர் டேவிட் தவாண் இயக்கத்தில் வெளியான ஜுத்வா படத்தின் இரண்டாம் பாகம் ஜுத்வா 2. இந்த படத்தில் இயக்குனர் டேவிட் தவானின் மகனும், நடிகருமான வருண் தவான் நடித்து வருகிறார். இந்த படத்தில் வருண் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
ஜாக்லின் ஃபெர்னாண்டஸ், டாப்சி பன்னு ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வரும் இந்த படத்தில், முதன் முதலாக பிகினி ஆடையில் ஆடுகளம் நாயகி டாப்சி நடித்துள்ளார். இதுகுறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள டாப்சி, பிகினி அணிவது எனக்கு வருத்தமில்லை. ஆனால், அதனை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்று தான் தெரியவில்லை. ஆனால், டிரைலர் வெளியான பின்னர், அந்த பதட்டம் குறைந்துள்ளது. முன்பு போல் அது குறித்து நான் கவலைப்படவில்லை. தற்போது, நம்பிக்கையுடன் உற்சாகமாக இருக்கிறேன் என்றார்.
மேலும், விடுமுறை காலங்களில் கடற்கரையில் நான் பிகினி அணிவது வழக்கம். ஆனால், திரையில் இதுவரை நான் பிகினி அணிந்ததில்லை. இந்த படத்திற்கு தேர்வான பின்னர், தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். ஸ்குவாஷ் விளையாடுகிறேன், உணவு முறையில் டயட் உள்ளிட்டவைகளை கவனமாக பார்த்துக் கொள்கிறேன். எனவே பிகினி அணிவதற்கான உடல் தற்போது எனக்கு கிடைத்துள்ளது என்றும் டாப்சி தெரிவித்துள்ளார்.
எதுவாகினும், தன்னுடன் நடிக்கும் நாயகி ஜாக்லினின் உடல் குறித்த கவலை டாப்சிக்கு இல்லாமல் இல்லை. “ஜாக்லின் ஃபெர்னாண்டஸின் உடல் குறித்து அனைவரும் அறிந்ததே. அதேபோல் தான் வருனின் கட்டுடலும். எனவே, அவர்கள் இருவர் மத்தியில் நான் மட்டும் வித்யாசமாக இருக்க விரும்பவில்லை. அந்த அழுத்தம் எனக்கு இருந்தது” என்றும் டாப்சி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.