சினிமாவில் வயது முதிர்ந்த முன்னணி நடிகர்கள் வயது குறைந்த இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தமன்னாவின் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால். சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில், ஹீரோவாக நடித்துள்ள ரஜினிகாந்த்க்கு தற்போது 72 வயதாகும் நிலையில், நாயகியாக நடித்துள்ள தமன்னாவுக்கு 33 வயதாகிறது. இருவருக்கும் இடையே 39 வயது இடைவெளி உள்ளது. இது மட்டுமல்லாமல் மூத்த நடிகர்கள் பலரும் இளம் நடிகைகளுடன் ஜோடியாக இணைந்து நடிப்பது தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டாலும் கூட அவ்வப்போது இது தொடர்பான விவாதமும் வந்துகொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த தமன்னாவிடம், வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஏன் வயது வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்? திரையில் நடிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை நீங்கள் பார்க்க வேண்டும், அவ்வளவுதான் என கூறியுள்ளார்.
இதற்கு ஹாலிவுட் நடிகர் நடிகர் டாம் குரூஸை உதாரணமாக கூறிய தமன்னா, தனது வாழ்க்கை முழுவதும், குரூஸ் பல அதிரடித் திரைப்படங்களில் நடித்துள்ளார் மற்றும் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இதில் எந்த ஸ்டண்ட் காட்சிகளுக்கும் அவர் டூப் பயன்படுத்தியதில்லை. "நான் வயதைப் பற்றி பேச வேண்டும் என்றால், 60 வயதிலும் டாம் குரூஸின் ஸ்டண்ட்களைப் பார்ப்பேன். அதேபோல் அந்த வயது வரும்போது நான் அசத்தலான நடனம் ஆட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஜெயிலர் படம் குறித்து கூறிய தமன்னா, இந்த படம் இயல்பாகவே இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு முக்கிய தமிழ் திரைப்படம். இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் இப்படம் சென்றடையும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“