தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கடத்தில் இறந்தவர்களை கூட ஏ.ஐ.டெக்னாலஜி மூலமாக வீடியோவில் உயிருடன் கொண்டு வருகின்றனர். இந்த வளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபக்கம் சற்று கஷ்டத்தையும் கொடுக்கிறது. இந்த வகையிலான ஒரு கஷ்டத்தில் தான் தற்போது தனுஷ் சிக்கிக்கொண்டார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான படம் ராஞ்சனா. தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இந்த படம் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழிலும் வெளியாகி வெற்றி பெற்றது., இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கிய இந்த படம், காலப்போக்கில் ஒரு 'கல்ட் கிளாசிக்' அந்தஸ்தைப் பெற்றது.
காதல், துரோகம், வலிகள் என உணர்ச்சிகரமான காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ஒரு சோகமான கிளைமாக்ஸுடன் முடிவடைந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடதம் பிடித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஒரிஜினல் படத்தில் சோகமான முடிவை மகிழ்ச்சியான முடிவாக மாற்றும் வகையில் இந்த படத்தை வாங்கிய நிறுவனம் ஏ.ஐ.டெக்னாலஜியை பயன்படுத்தி படத்தின் க்ளைமக்ஸை மாற்றியுள்ளனர். இது நடிகர் தனுஷையும், இயக்குனர் ஆனந்த் எல். ராயையும் கடும் அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், “'ராஞ்ஜனா' திரைப்படத்தின் கிளைமாக்ஸை ஏ.ஐ கொண்டு மாற்றியமைத்து மீண்டும் வெளியிட்டது எனக்கு பெரும் மன உளைச்சலை அளித்துள்ளது. இந்த மாற்று கிளைமாக்ஸ், படத்தின் ஆன்மாவையே அழித்துவிட்டது. என்னுடைய கடும் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இது, 12 வருடங்களுக்கு முன்பு நான் நடித்த படம் அல்ல,” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும், “திரைப்படங்களையும், படைப்புகளையும் ஏ,ஐ.கொண்டு மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல். இது கதை சொல்லும் நேர்மையையும், சினிமாவின் பாரம்பரியத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. இதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என நம்புகிறேன்,” என்றும் தனுஷ் வலியுறுத்தியுள்ளார்.
இயக்குனர் ஆனந்த் எல். ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த மூன்று வாரங்களாக இந்த சம்பவம் எனக்கு கனவு போலவும், மனதை புண்படுத்துவதாகவும் இருக்கிறது. மிகுந்த அக்கறையுடனும், கலை ரீதியாகவும் உருவாக்கப்பட்ட 'ராஞ்ஜனா' திரைப்படம், எனது அனுமதி இல்லாமல் மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இது, ஒரு படைப்பின் உண்மையான நோக்கத்தையும், அதன் ஆன்மாவையும் சிதைக்கும் செயல்,” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர்கள் நீரஜ் பாண்டே, கணிகா தில்லான் மற்றும் தயாரிப்பாளர் தனுஜ் கார்க் போன்ற பல திரையுலக பிரபலங்கள், தனுஷ் மற்றும் ஆனந்த் எல். ராய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது போன்ற ஏ.ஐ பயன்பாடு, கலை நேர்மைக்கு எதிரானது என்றும், தார்மீகமற்றது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.