நடிப்பில் இருந்து தற்காலிகமாக விலகி, கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவில் சாதித்த இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான விடா முயற்சி திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய்,ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்து சினிமாவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அதேபோல் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகியுள்ள அஜித், துபாயில் நடைபெறும் கார்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இதற்காக ஒரு கார் பந்தய அணியை வாங்கிய அஜித், தனது குழுவுடன் போட்டியில் பங்கேற்று வரும் நிலையில், முதல் சுற்று போட்டியில் அவரது அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.
போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட அஜித், விபத்தில் சிக்கினார். ஆனாலும் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், தற்போது ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில், அஜித் கலந்துகொண்ட நிலையில், அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வலென்சியா பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தில், கலந்துகொண்ட அஜித், முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்றபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது,
இந்த விபத்தில் அஜித் ஓட்டிய கார் தலைகீழாக கவிழந்த நிலையில், அஜித் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார். தற்போது அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பதிவில், வலென்சியா கார் பந்தயத்தில் 5வது சுற்று அஜித் குமாருக்கு சிறப்பாக இருந்தது. அனைவரின் பாராட்டுக்களுடன் 14வது இடத்தைப் பிடித்தார். ஆனால் 6வது சுற்று துரதிர்ஷ்டவசமானது.
மற்ற கார்கள் மோதியதால் 2 முறை விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோவில் அவர் தவறு செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. முதல் முறையாக விபத்து ஏற்பட்ட போதிலும், அவர் மீண்டும் களத்திற்கு சென்று நன்றாகச் செயல்பட்டார். இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டபோது, அவர் இரண்டு முறை கவிழ்ந்தார். அவரது விடாமுயற்சி வலிமையானது, அதனால் போட்டியை மீண்டும் தொடர காயமின்றி வருகிறார். அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. ஏ.கே. நன்றாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.