இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, தற்போது அரசியல் சினிமா என பயணித்து வரும் நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் சின்னத்திரையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1988-ம் ஆண்டு ரஜினிகாந்த் – பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் குஷ்பு. தொடர்ந்து வருஷம் 16, வெற்றி விழா, சின்னத்தம்பி, நாட்டாமை, அண்ணாமலை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 90-களில் தொடத்தில் இருந்து 2000-ம் ஆண்டு தொடக்கம் வரை ரஜினி, விஜயகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாதமல் இந்தி, தெலுங்கு கன்னடம் மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் நடித்துள்ள குஷ்பு, தி பிரிங் ட்ரெய்ன் என்ற பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு முதல் அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் குஷ்பு, திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் வலம் வருகிறார். சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்பு சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்திருந்தார்,
இதனிடையே குஷ்பு, மீண்டும் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரோஜனி என்ற சீரியலில் கமிட் ஆகியுள்ள குஷ்பு, அதற்கான பூஜையில் கலந்துகொண்டுள்ளார். இந்த சீரியல் டிடி தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. 1995-ம் ஆண்டு சின்ன சின்ன ஆசை உறவு என்ற சீரியலை இயக்கி சின்னத்திரையில் அறிமுகமான குஷ்பு, அர்த்தமுள்ள உறவுகள், கல்கி, நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
கடைசியான கலர்ஸ் தமிழ் சேனலில், மீரா என்ற சீரியலில் நடித்திருந்த குஷ்பு, அந்த சீரியலில் ரைட்டராகவும் பணியாற்றியிருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 5 மாதங்களில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு வேறு எந்த சீரயிலிலும் நடிக்காத குஷ்பு, தற்போது டிடி தமிழ் சீரியலில் நடித்து தனது சின்னத்திரை பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார். ஏற்கனவே டிடி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், தாயம்மா குடும்பத்தார் சீரியலில், நடிகை ராதிகா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.