தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் தனுஷ் ரூ1 கோடி நிதியை, நடிகர் சங்க தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க, பெருமளவு நிதி தேவைப்படுவதால், முன்னணி நடிகர்கள் பலரிடம் வங்கியில் வைப்பு நிதிக்காக ரூ1 கோடி நிதி நடிகர் சங்கம் சார்பில் கேட்கப்பட்டது. இதில் முதல் ஆளாக நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் ரூ1 கோடி நிதி அளித்தார். அவரைத் தொடர்ந்து கமல்ஹாசன், விஜய் ஆகியோர் நிதி அளித்திருந்தனர்.
இந்த பட்டியலில் தற்போது புதிதாக நடிகர் தனுஷ் இணைந்துள்ளார். இது குறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ், நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக ரூ.1 கோடி நிதியுதவியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.
அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க 40 கோடி நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நடிகர் நடிகைகள் தங்களது நிதி உதவியை அளித்து வருகின்றனர். ஏற்கனவே முன்னணி நடிகர்கள் நிதி வழங்கியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ50 லட்சம், மற்றும் நெப்போலியன் ரூ1 கோடி நிதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“